2 குருக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பாள் ஆலய அம்மன் சிலைக்கு சுடிதார் அணிவிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 7-ஆம் நூற்றாண்டில் சுயம்புவாக உருவெடுத்த அபயாம்பிகைக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என பக்தர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அம்மனுக்கு சுடிதார் அணிவித்த விவகாரத்தில் 2 குருக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். ஆகம விதிகளுக்கு புறம்பாக அலங்காரம் செய்ததால் திருவாவடுதுறை ஆதீனம் இந்த நடவடிக்கையை மேற்கொணடிருந்தார்.
இது தொடர்பாக ட்விட்டரில் நடிகை கஸ்தூரி தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் “ மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மனுக்கு மிக அழகிய முறையில், கண்ணியமாக கலா ரசனையுடன் புதுமையாக சுடிதார் அலங்காரம் செய்வித்த இரு குருக்களை பணி நீக்கம் செய்திருப்பது நியாயமற்ற பழமைவாதம். திருவாடுதுறை ஆதீனம் இருவரையும் மீண்டும் பாராட்டி பணியில் அமர்த்தவேண்டும்.
மின்விளக்கு, எலக்ட்ரிக் மேளம், ஏசி, ஒலிபெருக்கி,இது எதுவும் ஆகம கேடு இல்லை. ஒரு வித்தியாச அலங்காரத்தில்தான் ஆகமத்துக்கு ஆபத்தா? குளிக்காமல், ஏன், குடித்துவிட்டுக்கூட சிலர் வருகிறார்கள். எல்லாவிதமான ஆடையிலும் வருகிறார்கள். ஆனால் அம்மனுக்கு ஆடைக்கட்டுப்பாடா? ” என்று குறிப்பிட்டுள்ளார்.