"அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" பாஜகவிலிருந்து விலகினார் காயத்ரி ரகுராம்
அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி அவர்மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையில் நேரடியாக கருத்து மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பும் கூட காயத்ரி தொடர்ந்து பாஜக மாநில தலைமை மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்தார்.
இந்த நிலையில் பாஜகவில் இருந்து 6 மாத காலத்துக்கு நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “என்னுடைய கருத்தை சொல்ல, என் பிரச்னைகளை விசாரணை செய்ய தமிழக பாஜகவில் இடமில்லை. இங்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை; பெண்களுக்கு மரியாதை வழங்கப்படுவதில்லை. அதனால் பாஜகவில் இருந்து விலகுகிறேன். அண்ணாமலைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் கட்சியில் இருந்து கிண்டல் செய்யப்படுவதற்கு, கட்சியில் இல்லாமல் கிண்டல் செய்யப்படுவது மேல். வெளிநபராக ட்ரோலுக்கு உள்ளாவதே பரவாயில்லை.
கட்சி தொண்டர்கள் பற்றி யாருமே இங்கு கவலைப்படவில்லை. அண்ணாமலையின் ஒரே குறிக்கோள் உண்மையான தொண்டர்களை வெளியே அனுப்புவதுதான். பாஜகவிற்கு வாழ்த்துக்கள். பிரதமர் மோடி ஒரு சிறப்பான மனிதர். அவர் இந்த தேசத்தின் தந்தை. அவர் எப்போதும் என்னுடைய விஸ்வகுருவாக இருப்பார். தலைசிறந்த தலைவராக இருப்பார். அமித் ஷா எப்போதும் என்னுடைய சாணக்கிய குருவாக இருப்பார். அப்படியிருந்தும் நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.
கடந்த 8 வருடங்களாக என்னுடன் வேலை பார்த்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி. அவர்கள் என்னுடன் அன்பாக இருந்தனர். எனக்கு மரியாதை கொடுத்தனர். அது ஒரு சிறந்த பயணம். மற்றவர்களை அவமானப்படுத்துவது இந்து தர்மம் கிடையாது. நான் அண்ணாமலை தலைமைக்கு கீழ் இயங்க முடியாது. ஏனெனில் இங்கே சமூக நீதி இல்லை. பெண்களே... பாதுகாப்பாக இருங்கள். மற்றவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். யாரும் உங்களுக்காக வர மாட்டாரக்ள். நீங்கள் தனித்து இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது.
உங்களை யாரும் மதிக்கவில்லை என்றால் அங்கே நீங்கள் இருக்க கூடாது. உங்களை நீங்கள் நம்புங்கள். வீடியோ, ஆடியோ அனைத்தையும் வெளியிடும்படி நான் போலீசில் புகார் அளிக்க உள்ளேன். அண்ணாமலைக்கு எதிராக விசாரணை நடத்த சொல்ல இருக்கிறேன். அவர் மோசமான நபர். எனக்கு எதிராக டிரெண்ட் செய்யும் வார் ரூம் பற்றியும் புகார் கொடுப்பேன்'' என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.