அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்

நடிகையை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம், அவரின் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறது.

முன்னதாக, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதோடு, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 16ஆம் தேதி தள்ளுபடி செய்ததையடுத்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் ஜூன் 20-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

இவ்வழக்கில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் தாக்கல் செய்த மனு, ஜூன் 25ஆம் தேதி நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிகண்டன் தரப்பில், நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கும், தன்னுடன் பழகிய சில நாட்களிலேயே கர்ப்பமானார் என்று கூறுவதற்கும் ஆதாரங்கள் இல்லை என்றும், ஆரம்பகட்ட விசாரணையை முழுமையாக முடிக்காமலும், தன்னிடம் விளக்கம் பெறாமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் இ.ஜெய்சங்கர், காவல்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், தன்னை விட்டுப் போகக் கூடாது என நடிகைக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்தது, தன்னுடைய வாட்ஸ்அப் எண்ணிலிருந்து நடிகைக்கு போட்டோக்கள் அனுப்பியது, இருவரும் ஒன்றாக தங்கியிருந்தது ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.

அதேபோல புகார்தாரரான நடிகை  தரப்பில், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதன்பின்னர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com