போதைப் பொருள் வழக்கு | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவருக்கும் நிபந்தனை ஜாமீன்!
செய்தியாளர் - சுப்பையா
கடந்த மாதம் 23-ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், கடந்த 26 ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு பிறகு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நிபந்தனை ஜாமீன்..
நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தாக்கல் செய்த மனுக்கள், உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது,
ஸ்ரீகாந்த் தரப்பில், போதை பொருள் பயன்படுத்தியதாக, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல் எதிரி பிரதீப் குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும். ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப்பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என வாதம் வைக்கப்பட்டது.
நடிகர் கிருஷ்ணா தரப்பில், தன்னை கைது செய்ததற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்காமல் காவல்துறை கைது செய்திருப்பதாகவும், தன்னிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை எனவும் வாதம் வைக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், பிரசாத் என்பவரிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் புழக்கம் குறித்து தெரிய வந்ததாகவும், அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், முதல் எதிரி பிரவீன் குமாரும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் ஜூன் 23-ம் தேதியும், கிருஷ்ணா ஜூன் 26-ம் தேதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது..
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் எனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இருவரும் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.