நடிகர்களின் பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
2009 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 பேர் தாக்கல் செய்த மனுவை உதகை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் நடிகர்களின் பிடிவாரண்டுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியது. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது. இதனால் திரையுலகில் சர்ச்சை வெடித்தது. இதனைக் கண்டித்து பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஒன்று திரண்ட நடிகர்கள் கண்டனக் கூட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற திரையுலகினர் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக புகார் எழுந்தது.
நடிகை ஸ்ரீபிரியா, சத்யராஜ், விஜயகுமார், சரத்குமார், சூர்யா, அருண் விஜய், விவேக், இயக்குனர் சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட 8 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 பேருக்கும் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்துசெய்யக்கோரி 8 பேர் சார்பில் இன்று மனுத்தக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து பிடிவாரண்டை உறுதி செய்து, அவர்கள் 8 பேரும் ஜூன் 17ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விதித்த பிடிவாரண்டை எதிர்த்து நடிகர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர்கள் மீதான பிடிவாரண்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.