”விஜய்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.. ஆனால் அவர் உதவி எனக்குத் தேவையில்லை” - சீமான் அதிரடி!

”நடிகர் விஜய்யின் உதவி தனக்குத் தேவையில்லை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜய், சீமான்
விஜய், சீமான்புதிய தலைமுறை

திருநெல்வேலி மாவட்டம் மானூரில் அரசு கலைக் கல்லூரி கட்டுவதற்கு முதலில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை கட்டுமானப் பணிகள் நடைபெற்று மீண்டும் அந்தப் பணிகள் கைவிடப்பட்டு மாற்று இடத்தில் கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பழைய கல்லூரி கட்டுமானம் நடைபெற்ற இடத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாடு அரசு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. மாற்று இடத்தில் கல்லூரி கட்டுவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது” என்று தெரிவித்தவர் தொடர்ந்து அரசியல் ரீதியிலான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

”செந்தில் பாலாஜிக்கு நடைபெறும் அறுவைசிகிச்சையை நேரலை செய்தால்தான் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று தெரியும். அவரது, உடல் நலத்தை காரணம் காட்டி அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்து விடுவார்கள்.

ஒரே இரவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்த பிரதமர் மோடி மே மாதம் அல்லது வரக்கூடிய டிசம்பர் மாதத்திலேயே நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம். அவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்துவார். காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு ஊழல் ஆட்சியால்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது.

மோடியை வீழ்த்த மாநில கட்சிகள் வலுப்பெற வேண்டும். தேர்தலுக்குப் பிறகு கூட்டாட்சி நடத்தும் விதமாக பேச்சுவார்த்தை மூலம் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியின் தலைவரை பிரதமராக தேர்ந்தெடுக்கலாம். அதை விடுத்து பொது வேட்பாளராக மோடிக்கு எதிராக ராகுல் காந்தியை நிறுத்தினால் அவர் ஊதி தள்ளி விடுவார்.

ஒரு பட்டனை அழுத்தினால் குண்டு விழும் என்று ரஷ்யாவும் சீனாவும் கூறிக் கொள்வது போன்று, ஒரே பட்டனை அழுத்தினால் பாஜகவிற்கு வாக்குகள் விழும் வகையில் ஏற்பாடுகளை மோடி செய்வார்.

பணம் கொடுப்பவர்கள் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் நேர்மை இல்லை. நடிகர் விஜய் நன்மை செய்யும் நோக்கில் அவர் அரசியலுக்கு வந்தால் தவறில்லை. அதேநேரத்தில் விஜய்யின் உதவி தனக்கு தேவையில்லை. அத்துடன் தற்போது இந்தியாவில் அதிகமாக திரைப்படத்திற்கு சம்பளம் பெறும் நடிகர் விஜய்தான். தமிழ்நாட்டில் அதிகமான ரசிகர்கள் இருப்பதும் அவருக்குத்தான். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.

மக்களை பிளவுபடுத்தி வேலை செய்வதுதான் பாஜகவின் வேலை. தன்னுடைய மறுரூபம் தான் பாரதிய ஜனதா கட்சி. தங்களை தான் பாஜக பின்பற்றுகிறார்கள். மக்களுக்கு நன்மை செய்வோம் என்று கூறிக் கொள்ளும் பாஜக பிணத்தின் மீது மேடை போட்டு பேசுவார்கள். பாஜகவும் திமுகவும் ஈருடல் ஒருதலை போன்றது” என்றார்.

திருநெல்வேலியில் சீமான் பேசியது குறித்து இந்த வீடியோவில் பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com