“தனி நீதிபதியின் கருத்துக்கள் என்னை புண்படுத்தின” - நீதிமன்றத்தில் விஜய் வேதனை

“தனி நீதிபதியின் கருத்துக்கள் என்னை புண்படுத்தின” - நீதிமன்றத்தில் விஜய் வேதனை
“தனி நீதிபதியின் கருத்துக்கள் என்னை புண்படுத்தின” - நீதிமன்றத்தில் விஜய் வேதனை

இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது என நடிகர் விஜய் தரப்பு தெரிவித்திருக்கிறது.

நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்குக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார். குறிப்பாக நடிகர்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் வரி செலுத்தவும், அபராதத்தை செலுத்தவும் தயாராக இருப்பதாகவும், தன்னை பற்றிய எதிர்மறை கருத்துகளை நீக்கவேண்டும் என்றும் நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என்று நீதிபதி கூறியிருந்தார். ஆனால், வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்லவேண்டிய அவசியமில்லை. நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற் கருத்துக்கள் என்றும், கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் கூறப்பட்டது. மேலும் தன்னைப்போலவே நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சூர்யா வழக்கிலும் இதுபோன்ற கருத்துகளை பதிவு செய்திருப்பதாகவும், சட்டவிரோதமாக இந்த வழக்கை தொடரவில்லை; வரிவிலக்கு கோருவது என்பது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதால்தான் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் சினிமாத்துறையில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவரும் நிலையில் தனக்கு வரிய்ப்பு செய்யவேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நிலுவை வரித்தொகையான ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்தை  ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே நீதிபதி கூறிய கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது எனவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தேதிகுறிப்பிடாமல் வழக்கை தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com