”எனக்கு விஜய் பற்றியே தெரியாது; இனி சினிமாவில் இருந்து யாரும்..” - ஆடிட்டர் குருமூர்த்தி

”எனக்கு சினிமா பற்றியே தெரியாது என்று சொல்லும்போது விஜய்யை பற்றி எப்படித் தெரியும்” என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பள்ளிப் பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் சமீபத்தில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். அப்போது பேசிய அவர், “மாணவ மாணவிகள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். அதேபோல் தேர்தல்களில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.

விஜய்
விஜய்புதிய தலைமுறை

அப்போது சில மாணவிகள் விஜய்யிடம் “நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். இதையொட்டி அன்று முதல் விஜய்யின் அரசியல் களம் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் கருத்துகளை எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனக்கு விஜய் பற்றியே தெரியாது. எனக்கு சினிமா பற்றியே தெரியாது என்று சொல்லும்போது விஜய்யை பற்றி எப்படித் தெரியும்? என்னைப் பொறுத்தவரை இனி சினிமாவில் இருந்து வந்து வெற்றி அடைய முடியும் என்று நான் நினைக்கவில்லை. எம்.ஜி.ஆர். ஒரு கட்சியை தமிழகத்தில் அமைக்கக் காரணமே, திமுகவில் 30 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் இருந்தது.

அவர்களுக்கு திமுக அரசியல் செய்து அத்துப்படி. திமுகவிற்குள்ளேயே அதிமுக இருந்தது. அதனால் அவர் அதிமுகவை அமைக்கும்போது அக்கட்சி தயாராக இருந்தது. ஆனால் தற்போது நீங்கள் உங்களுடைய ரசிகர்களை எல்லாம் வைத்து ஒரு கூட்டத்தை கட்சியாக மாற்ற முடியாது. இதே பிரச்னைதான் ரஜினிக்கும் வந்தது. 15 பேர் சேர்ந்து ஒரு கூட்டணி உருவாகுமா என்பதே ஒரு சந்தேகம்?

அப்படியிருக்கையில், 10 லட்சம் பேர் சேர்ந்து ஒரு கட்சியை உருவாக்குவது என்பது எவ்வளவு பெரிய கஷ்டம்? அதனால் இது பெரிய அளவுக்கு வெற்றி பெறாது. ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒரு கட்சி முன்னேறி வருவதற்கு 20-30 வருடங்கள் ஆகும். திமுக, காங்கிரஸ் கட்சிகள் எல்லாம் அப்படித்தான் ஆனது. அதன்மூலம் பல மனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தலைவர்கள் உருவாகுகிறார்கள்.

இவையெல்லாம் இல்லாமல் கும்பல் ஒன்றை வைத்து திடீரென ஒருவர், ஆட்சியைப் பிடிக்கிறேன் என்று சொல்கிறார் எனில் அவருக்கு தன்னம்பிக்கை இருக்கிறது என்றுதான் சொல்வேன். ஒரு கும்பலை எப்படி கட்சியாகா மாற்றுவதில் சிரமம் இருக்கிறது என்பதை ரஜினியும் புரிந்து கொண்டிருந்தார். விஜய், ரஜினி என யாரால் அரசியல் செய்ய முடியும் என்பதைத் தள்ளி வைத்துவிட்டு, ஒரு கும்பலைக் கட்சியாக மாற்றுவது கஷ்டம் என்பது என்னுடைய அனுபவத்தில் புரிந்துகொண்டேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com