”விஜய்யே அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்”-கசிந்த தகவலும் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அதிரடி விளக்கமும்!
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சென்னைக்கு அழைத்து கடந்த மாதம் கல்வி உதவி வழங்கும் விழாவை நடத்திய நடிகர் விஜய், தற்போது தன்னுடைய பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இது, அவர் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வரும் 15ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவர் இரவு பாடசாலை திட்டத்தைத் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது 234 தொகுதிகளில் இரவு பாடசாலை திட்டத்தைத் தொடங்கவும், இத்திட்டத்துக்கு படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் என்ற பெயர்களில் ஒன்றை வைக்கவும் விஜய் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘புதிய தலைமுறை’க்குப் பேட்டியளித்துள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இரவு நேர பாடசாலை திட்டம் ஏற்கெனவே, கடலூரில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனவே, அடுத்தகட்டமாக இந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுவதும் முறையாகச் செயல்படுத்துவது குறித்து நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.