``இந்த ஹோட்டல் வைக்க அமைச்சர் பிடிஆர் தான் காரணம்”- நடிகர் சூரி நெகிழ்ச்சி பேட்டி!
மதுரை அரசு மருத்துவமனையில் நடிகர் சூரி துவங்கியுள்ள உணவகத்தை இன்று திறந்து வைத்தார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாராஜன்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரியின் தனியார் உணவகத்தை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அவருடன் இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்தான் மருத்துவமனையில் தனது உணவகம் திறக்கப்பட காரணம் எனக்கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் தனது படங்கள் குறித்து அவர் பேசுகையில், "விடுதலை படம் பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும். சமீபத்தில் ரிலீஸான படங்கள் பெற்ற அதே வெற்றியையும், மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கும். இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் மெனக்கெட்டு உள்ளார். விடுதலை படத்தில் நான் இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது. விஜய் சேதுபதியும் படத்தில் இருப்பதால் இதற்கு தனி அந்தஸ்து கிடைத்து விட்டது. இந்தியாவிலேயே முக்கியமான படமாக விடுதலை இருக்கும். மக்களுக்கான படமாகவும், அவர்களை சிந்திக்க வைக்கும் படமாகவும் இருக்கும்" என்றார்.
விஷ்ணு விஷால் தந்தை மீதான பண மோசடி வழக்கில் தன் மீது குற்றமில்லை என காவல்துறை விசாரணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், "குற்றத்தை நிரூபிக்க தான் நீதிமன்றமும், காவல்துறையும் உள்ளது. தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அது. அவ்வளவு எளிதாக யாரும் எதையும், சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது. இறைவன் இருக்கிறான். இறைவனுக்கு இணையாக நீதிமன்றத்தை நினைக்கிறேன். நீதிமன்றம் நியாயம் வழங்கும் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க... மாமனிதன்… நல்லா வாழ்ந்திருக்க வேண்டிய மனுஷன்! - திரைவிமர்சனம்