மதுரையில் நடிகர் சிவகுமார் செல்போனை தட்டிவிட்ட விவகாரத்தில் அந்த மாணவனுக்கு புதிய செல்போன் வழங்கப்பட்டது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். அப்போது செல்ஃபி எடுத்த ஒரு இளைஞரின் செல்போனை சிவகுமார் படாரென தட்டிவிட்டார். இதில் அந்த இளைஞரின் செல்போன் உடைந்து சிதறியது. சட்டென்று நடைபெற்ற இந்த நிகழ்வால் அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார். சிவகுமார் செல்போனை தட்டிவிட்ட வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பல்வேறு தரப்பினரும் சிவகுமாருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்த நிலையில் அந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து புதிய வீடியோ ஒன்றையும் சிவக்குமார் வெளியிட்டார்.
அதில், “ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு அப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயம் வெரி சாரி” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் சிவகுமார் சார்பில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய செல்போன் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட மாணவன் செல்போன் தட்டிவிடப்பட்ட காட்சியை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கிய இணையவாசிகளுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

