“அதிமுக-பாமக கூட்டணி நாடகம்.. பின்னணி இது தான் ?” - பாமகவில் இருந்து விலகிய ரஞ்சித்

“அதிமுக-பாமக கூட்டணி நாடகம்.. பின்னணி இது தான் ?” - பாமகவில் இருந்து விலகிய ரஞ்சித்
“அதிமுக-பாமக கூட்டணி நாடகம்.. பின்னணி இது தான் ?” - பாமகவில் இருந்து விலகிய ரஞ்சித்

பாமக மாநில துணைத் தலைவர் ரஞ்சித், மக்களவைத் தேர்தல் கூட்டணியை ஏற்காமல் அக்கட்சியிலிருந்து விலகினார்.

பாமகவில் இருந்து விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசுக்கு எதிராக எத்தனை போராட்டங்கள். எட்டு வழிச்சாலைக்கு எதிராக கிராமங்களுக்கு சென்று அங்கிருக்கும் மக்களிடம் பேசி கையெழுத்து இயக்கம் நடத்தி, அதன்மூலம் வழக்குப்போடப்பட்டு நிலுவையில் உள்ளது. ஒரு நிமிடமாவது பாட்டாளி மக்கள் கட்சி அந்த மக்களை நினைத்து பார்க்கிறதா ? வேதனையாக இருக்கிறது. நான் பதவியில் இருப்பதற்கோ, கெளரவமாக இருக்க வேண்டும் என்பதற்கோ 4 பேருக்கு கூஜா தூக்கி இருக்க முடியாது. தவறு யார் செய்தாலும் தவறு தான். மதுக்கடை எதிராக போராடிவிட்டு, மதுவை விற்பவர்களுடனே எப்படி கூட்டணி வைக்க முடியும். இது என்ன கொள்கை. 

குட்கா வழக்கு தொடர்பாக அனைத்து அமைச்சர்கள் மீது வழங்கப்பட்ட குற்றச்சாட்டு புகார் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. அமைச்சர்களை மன்னாங்கட்டி, மடையன், ஒன்றும் தெரியாதவர்கள், அடிமை, 5 அறிவு படைத்தவர்கள், ஆண்மையற்றவர்கள் என கடந்த ஒரு மாதம் முன்பு வரை விமர்சித்துவிட்டு, இப்போது கூட்டணியா? யாரை எதிர்த்து போராடுகிறோமே, அவர்கள் காலைக்கட்டிக்கொண்டு விருந்து சாப்பிடுவதா? இதையெல்லாம் என்னால் ஜீரணிக்க முடியாது. இப்படி ஒரு கீழ்த்தரமான அரசியல் மன வேதனை அளிக்கிறது. கூட்டணி அமைத்ததற்கு ஒரு காரணம் இருக்காதா? என யோசித்துக்கொண்டே இருந்தேன். எனது தாய், மனைவி, நண்பர்களிடம் கூட்டணி குறித்து கேட்டன். அவர்கள் தூற்றிவிட்டனர். 

தமிழகத்திற்கு ஒரு மாற்றம் வராதா என்ற நிலையில் தான், அன்புமணியை நாங்கள் தேர்வு செய்தோம். உங்கள் பின்னால் வந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் நீங்கள் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டீர்கள். 30 ஆண்டுகாலமாக நீங்கள் தடுக்கி விழும்போது தாங்கிப்பிடித்த மக்களை நீங்கள் ஏமாற்றலாமா? அப்படி எதைக் கண்டீர்கள் இந்தக் கூட்டணியில் என்று கேட்டால், 10 அம்ச கோரிக்கைகளை கூறுகின்றனர். இது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. அவர்கள் மட்டும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் கூட்டணி வைக்கிறோம் என தெரிவித்திருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பேன். நானும் களத்தில் வேலை செய்திருப்பேன். 

ஆனால் இது மக்களை ஏமாற்றும் செயல். பணத்திற்காக, பதவிக்காக இப்படி திடீரென்று அமைக்கும் கூட்டணி தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகம். இது என்ன நாடகம் என்றால், உள்ளாட்சி தேர்தல் வரை கூட்டணியில் இருந்துவிட்டு, பின்னர் கூட்டணியிலிருந்து விலகுவதாக கூறுவார்கள். அதன்பின்னர், சட்டசபைத் தேர்தலில் மீண்டும் மாற்றம் முன்னேற்றம் என கூறி ஏமாற்றுவார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார் ரஞ்சித்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com