“சிறப்பான தரமான சம்பவம் இருக்குமா?”:நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினி..!

“சிறப்பான தரமான சம்பவம் இருக்குமா?”:நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினி..!
“சிறப்பான தரமான சம்பவம் இருக்குமா?”:நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினி..!

2021-ம் ஆண்டு தேர்தலுக்கு தமிழக அரசியல் தயாராகி வருகிறது. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன. குறிப்பாக 2021-ம் ஆண்டு தேர்தலில் எதிர்பார்க்கப்படும் அரசியல் வருகையாக இருக்கிறார் ரஜினி. இன்னும் கட்சி தொடங்கப்படவில்லை என்றாலும் சமீபத்திய அரசியல் செய்திகளில் ரஜினியின் பெயர் அடிக்கடி வந்து போகிறது. அவ்வப்போது மக்கள் மன்றத்தினரையும் ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த வாரம் சென்னையில், ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர் கூட்டத்தில் 36 மாவட்டங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், ரஜினியின் அரசியல் வருகை, மாவட்ட செயலாளர்களின் பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்பட்டது. அப்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்பது உண்மையல்ல என நிர்வாகிகளிடையே அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகின. அக்கூட்டத்தின் முடிவில், ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றமென ரஜினி கருத்து கூறியிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நாளை மீண்டும் சந்திக்க உள்ளார். சென்னையில் ‌உள்‌ள ராகவேந்திர ‌‌மண்டபத்தில் நாளை காலை எட்டு மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைவதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் அவர் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியில், மக்கள் மன்ற நிர்வாகிகளை நாளை சந்திக்கும் ரஜினி கட்சியின் பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சித் தொடங்கப்போகும் நாள், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிர்வாகிகளுடனான சந்திப்புக்கு பின்னர் நாளை காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்காக தேசிய ஊடங்கங்கள் பெரும்பாலானவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், நாளை நிச்சயம் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவை இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் தங்களது கொண்டாட்டத்தை இப்போதே தொடங்கிவிட்டனர். அத்துடன், ரஜினி என்னதான் சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com