"பாஜகவின் மற்றொரு முகமாகவே இருப்பார் ரஜினி!" - திருமாவளவன் விமர்சனம்

"பாஜகவின் மற்றொரு முகமாகவே இருப்பார் ரஜினி!" - திருமாவளவன் விமர்சனம்
"பாஜகவின் மற்றொரு முகமாகவே இருப்பார் ரஜினி!" - திருமாவளவன் விமர்சனம்

பாரதிய ஜனதா கட்சியின் நெருக்கடியாலும் அச்சுறுத்தலாலும்தான் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளதாக கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், "பாஜகவின் மற்றொரு முகமாகவே இருப்பார் ரஜினி" என்றும் விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரம் நகர் ஓரிக்கையில் இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது:

"ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எத்தனையோ பேர் இருக்கையில், பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்த் நியமித்திருக்கிறார். உடல்நலன் சரியில்லை என்று சொன்னவர் திடீரென அரசியல் கட்சி தொடங்கியிருப்பது, அச்சுறுத்தல் காரணமாக எடுத்த முடிவாகவே இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. 

பா.ஜ.க, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் போன்ற சனாதன சக்திகளின் நெருக்கடியால்தான் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். அதற்கான தேதியும் தெரிவித்திருக்கிறார். எனவே, அவர் பாரதிய ஜனதா கட்சியின் மற்றொரு முகமாக இருப்பார் என்றே சொல்லத் தோன்றுகிறது. 

உலக அளவிலும் இந்தியாவும் அதிரும் வகையில் தொடர்ந்து 10 நாள்களாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்‌ ஒரு பெரிய யுகப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வரும் 8 ஆம் தேதி பாரத் பந்த் நடைபெறுகிறது. இந்த பந்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 10 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சிகளில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 

சூரப்பாவை நியமிக்கும்போது அவரை ஏன் நியமிக்க வேண்டும் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருந்தார். பிறகு ஏன் அவருக்காக பரிந்து பேசுகிறார் என தெரியவில்லை. சூரப்பா மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் யாரும் புகார் அளிக்கவில்லை. அவருடைய நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கமலஹாசன் அரசியல் அடிப்படையில் ஆதரிக்கிறாரா அல்லது அரசியலில் நேர்மையான அணுகுமுறை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆதரவு தருகிறாரா என தெரியவில்லை. 

தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை 60 சதவீதமாக இருந்தது, இப்போது 10 சதவீதமாக குறைந்து இருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பெருமளவு பாதிக்கும்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com