திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற நடிகர் பிரேம்ஜி திருமணம் - நேரில் வாழ்த்திய திரை நட்சத்திரங்கள்!
செய்தியாளர்: B.R.நரேஷ்
திருவள்ளுார் மாவட்டம், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோவில் வளாகத்தில் திரைப்பட இயக்குனர் கங்கை அமரன் மகனும் நடிகருமான பிரேம்ஜி - இந்து திருமணம் மிகவும் எளிமையான முறையில் இன்று காலை நடைபெற்றது. கங்கை அமரன் அவரது மூத்த மகன், திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் திரைப்பட நடிகர்கள் சிவா, சந்தான பாரதி, ஜெய்,, கார்த்திக் ராஜா உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற பிரேம்ஜி திருமணத்தில் பங்கேற்ற திரைப்பட நட்சத்திரங்களை காண சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.