"நடிகர் பிரசன்னா மார்ச் மாதம் மின் கட்டணத்தைக் கட்டவில்லை" - மின்சார வாரியம் விளக்கம் !

"நடிகர் பிரசன்னா மார்ச் மாதம் மின் கட்டணத்தைக் கட்டவில்லை" - மின்சார வாரியம் விளக்கம் !
"நடிகர் பிரசன்னா மார்ச் மாதம் மின் கட்டணத்தைக் கட்டவில்லை" -  மின்சார வாரியம் விளக்கம் !

நடிகர் பிரசன்னா மார்ச் மாதத்துக்கான மின் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

மின்சாரக் கட்டணம் தொடர்பாக புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த நடிகர் பிரசன்னா, “இந்த மாதம் மின்சாரக் கட்டணம் எனது தந்தை, மாமனார் மற்றும் தன்னுடைய வீட்டிற்குச் சேர்த்து ரூ.70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி மாதத்தைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. பொது முடக்கத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், மின்சார வாரியம் தவணை முறையில் கட்டுவதற்கு அல்லது கணக்கீடு எடுக்காத மாதத்திற்கு மாற்று வழியைப் பின்பற்ற வேண்டும். என்னால் இந்தத் தொகையைக் கட்டிவிட முடியும். சாதாரண மக்களால் கட்ட இயலாது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்குத் தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று விளக்கமளித்துள்ளது, அதில் " நடிகர் பிரசன்னா அவர்கள் மின்வாரியம், ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாகத் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார். இந்தக் கணக்கெடுப்பு முறையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படுவதால் பிரசன்னா அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடும் சொற்களால் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்" எனக் கூறியுள்ளது.

மேலும் " பிரசன்னா அவர்கள் வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு எண்.328-010-60 மற்றும் 328-010-61. இந்த மின் இணைப்பு எண்களில் உள்ள 328-010-60-ஐ கணக்கீடு செய்ததில் ஜனவரி மாதம் யூனிட் 2280 மின் நுகர்வுக்கு ரூ.13,528/-ஐ செலுத்தியுள்ளார். மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிப்பால் கணக்கீடு செய்ய முடியாத நிலையில் முந்தைய மாத கட்டணமான ரூ.13,528/- நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தக் கட்டணம் இதுவரை மின்வாரியத்திற்குச் செலுத்தப்படவில்லை. மேற்கண்ட மின் இணைப்பில் மே மாதம் நான்கு மாதங்களுக்கான மொத்த நுகர்வு 6920 யூனிட் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது" என விளக்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து " இந்த 6920 யூனிட்டை மொத்தமாகக் கணக்கிட்டால் இதற்கான கட்டணம் ரூ.44,152/- ஆகும். ஆனால் செய்திக் குறிப்பில் கூறியுள்ளபடி 6920 யூனிட்டானது இரண்டு மாத மின் கணக்கெடுப்பு அடிப்படையில் இரு இரண்டு மாத நுகர்வாகப் பிரிக்கப்பட்டு 3460 யூனிட், வீதப் பட்டியலின்படி மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது. 3460 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.21,316/- ஆகும். ஆக இரண்டு 3460 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.42,632/- ஆகும். இவற்றில் முந்தைய மாத கட்டணம் ரூ.13,528/- கழிக்கப்பட்ட பின் ரூ.29,104/- மட்டுமே மே மாத கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் நடிகர் பிரசன்னா அவர்கள் முந்தைய மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.13,528/-ஐ செலுத்தாத காரணத்தினால் அவர் மொத்தமாகச் செலுத்த வேண்டிய தொகை ரூ.42,632/- ஆக உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆகவே மின்சார வாரியத்தால் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் பொழுது, நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு அதற்கான வீதப் பட்டியலில் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்டபின் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது. இதைக் கருத்தில் கொள்ளாமல், முந்தைய மாத யூனிட்டை கழிக்காமல் தொகையை மட்டுமே கழிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும்" எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com