”ஆட்டோவுக்கு 50 ரூபாய் இருக்குமா?”-அள்ளி அள்ளி கொடுத்த மயில்சாமி; வைரலாகும் விவேக் பேச்சு!

”ஆட்டோவுக்கு 50 ரூபாய் இருக்குமா?”-அள்ளி அள்ளி கொடுத்த மயில்சாமி; வைரலாகும் விவேக் பேச்சு!
”ஆட்டோவுக்கு 50 ரூபாய் இருக்குமா?”-அள்ளி அள்ளி கொடுத்த மயில்சாமி; வைரலாகும் விவேக் பேச்சு!

நடிகர் மயில்சாமி மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். அவரது குணங்கள் குறித்து பலரும் பேசிவரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அவரது நண்பரும் மறைந்த நடிகருமான விவேக் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

’மனிதநேய சாமி’யான மயில்சாமி மரணம்

பிறந்த மனிதர் எல்லாருக்கும் இறப்பு என்பது நிச்சயம். ஆனால், அந்த இறப்பின்போது எல்லா மனிதர்களும் பேசப்படுவதில்லை. ஏதோ, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருப்பார்கள். காரணம், தன் சுயநலத்தைவிட பொதுநலத்தைப் பெரிதாய் மதித்தவர்களாகவும், உதவி தேவைப்படுபவர்களுக்கு ஓடோடிப்போய் உதவிக்கரம் நீட்டியவர்களாகவும், நாட்டுக்காக உயிரையும் விட்டவர்களாகவும் இருப்பார்கள். அந்தப் பட்டியலில் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தைத் தழுவிய, ’மனிதநேய சாமி’யான நடிகர் மயில்சாமியும் ஒருவர். ஆம் அவர், தேடித்தேடி, ஓடிஓடிப் போய் உதவிக்கரம் நீட்டியதைத்தான் இன்று அவரது நண்பர்களும் மக்களும் அவரது வீட்டு வாசல் முன்பு திரண்டுநின்று கண்ணீர்சிந்தி பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

சாதாரண மக்களுடன் கலந்தவர்

அந்தளவுக்கு உதவி செய்தவர் அவர்; எல்லா மக்களிடமும் சகஜமாய்ப் பழகக்கூடியவர்; எப்போதும் சிரித்த முகத்துடனேயே பதிலளிக்கக்கூடியவர். பணம் இருக்கிறது என்பதற்காக பந்தா காட்டமாட்டார். ஏழை எளிய மக்கள் உண்ணும் உணவகங்கள், தேநீர்க் கடைகள் எனச் சாதாரண மக்கள் பிரவேசிக்கும் கடைகளுக்குள்ளே சென்று மக்களுடன் மக்களாய்ச் சாப்பிடுவார். அப்படிப்பட்ட நல்லுள்ளம் படைத்த மனிதரைத்தான் மரணதேவன் இங்கு விட்டுவைக்கவில்லை. ’நீ இங்கு செய்த உதவிகள் போதும்; மேலுலகத்தில் உனக்காக மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்’ என அழைத்துச் சென்றுவிட்டான்போல. அப்படித்தான் அவரது நண்பரும் நடிகருமான விவேக்கை, கடந்த 2021ஆம் ஆண்டு காலதேவன் அழைத்துச் சென்றான். அவரும், மயில்சாமிபோல உதவும் உள்ளம் படைத்தவர். அது மட்டுமின்றி, இயற்கையைப் பாதுகாப்பதற்காக மரக்கன்றுகளை இந்தியா முழுவதும் நடும் பணியில் ஈடுபட்டவர் அவர்.

நடிகர் விவேக் பேச்சு வைரல்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற கிரீன் கலாம் இயக்கத்தைத் தொடங்கியவர் அவர். அந்தக் கனவு எட்டுவதற்கு முன்பே அவரது உயிரைப் பறித்துக்கொண்டது இயற்கை. என்றாலும், மயில்சாமியும் விவேக்கும் இன்று நம்மிடம் இல்லையென்றாலும் அவர்கள் விட்டுச் சென்ற நினைவலைகள் நம் உள்ளங்களில் நீங்காது இருக்கின்றன. அதிலும் தற்போது உயிரிழந்த மயில்சாமி குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் விவேக் பேசிய கருத்துதான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மயில்சாமி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் 

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விவேக், “காசிருந்தால் உதவ வேண்டும் என எண்ணுவார். ஒருநாள் பணக்காரனாய் இருப்பார்; மறுநாள் பிச்சைக்காரராய் இருப்பார், அவர்தான் மயில்சாமி. அவருடைய வாழ்க்கையை இயக்குநர் பாரதிராஜாவிடம் சொல்லியிருந்தால், தனிக்கதையாகவே சினிமாவாகவே எடுத்திருப்பார். மயில்சாமி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர், விசுவாசி. அவரது வாழ்க்கையில் எல்லாமே எம்.ஜி.ஆர்தான். தமிழையே எழுத்துக்கூட்டித்தான் படிப்பார். படிப்பறிவே இல்லாத அவர், எம்.ஜி.ஆர். என்ற ஒரு விஷயத்தை மனதுக்குள் வைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார் என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம்? சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய தங்கச் சங்கிலியில் எம்.ஜி.ஆர். போட்டோவைப் பதித்து அதை டாலராக கழுத்தில் அணிந்துகொண்டவர் மயில்சாமி. அந்த டாலர் அடிவயிறு வரை இருக்கும். இந்த நிலையால்தான் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் கடலூருக்கு அருகில் உள்ள தேவதானப்பட்டி இந்தி நடிகர் விவேக் ஓபராய் சென்று உதவி கொண்டிருந்தார்.

ம்.ஜி.ஆர். டாலரை விவேக் ஓபராயிடம் வழங்கிய மயில்சாமி

இதைக் கேள்விப்பட்டு, தன்னிடம் பணம் இல்லாத நிலையிலும் அவர்களுக்கு உதவ நினைத்தார் மயில்சாமி. ஆனால், நம்மவருக்கு ஆங்கிலம் தெரியாது; இவரிடம் விவேக் ஓபராய் ஆங்கிலம் பேசினால் என்றால் அவருக்கே ஆங்கிலம் தெரியாமல் போய்விடும். அப்படி ஒரு சூழலில், விவேக் ஓபராயின் வீட்டுக் கதவைத் தட்டி, ‘ஹலோ சார், யுவர் ஹெல்ப் சூப்பர்’ என்று சொல்லி தன் கழுத்தில் கிடந்த எம்.ஜி.ஆர். டாலரை அவரிடம் தந்துவிட்டு மயில்சாமி அங்கிருந்து சென்றுவிட்டார்.

உதவி... உதவி... உதவி. இதுதான் மயில்சாமி

சாதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் மயில்சாமியைப் பொறுத்தவரை யார் வாழ்க்கையையும் கெடுக்கக்கூடாது; முடிந்தால் நாம் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணக்கூடியவர். ஆம், அவரிடம் இருந்ததெல்லாம் உதவி... உதவி... உதவி. இதுதான் மயில்சாமி. தன்னிடம் இல்லையென்றாலும் அடுத்தவரை நள்ளிரவில் தொல்லை செய்தாவது தேவைப்படும் நபர்களுக்கு உதவி செய்வார். ஒருமுறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஹோட்டல் ஒன்றில் என் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தேன்.

ஆட்டோவுக்கு ரூ.50 கேட்ட மயில்சாமி

அப்போது நள்ளிரவில் போதையில் மயில்சாமி அங்கு வந்து என்னை அன்பால் அணைத்தார். அந்த நிகழ்ச்சியில் மேடையில் பாடகர் ஒருவர் ஹிந்தி பாட்டு ஒன்றைப் பாட, அதைப் பார்த்து ரசித்த மயில்சாமி, உடனே தன் பையிலிருந்து ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார். தொடர்ந்து அவரிடம், ‘ப்ளீஸ் அடுத்த பாடல்’ எனச் சொல்லிவிட்டு என்னருகில் வந்து அமர்ந்தார், மயில்சாமி. அப்படியே அடுத்தடுத்த பாடல்களுக்கும் 100 ரூபாய் நோட்டுக்களைத் தந்துகொண்டே இருந்தார். அப்போது நான் மயில்சாமியிடம், ’மச்சான், போதும்... மொத்தமாய் டிப்ஸ் கொடுக்கலாம்’ என்றேன். ஆனால் அவரோ, ’அதெப்படி, இந்தப் பாட்டு நல்லாயிருக்கு. இதற்கு தனியாக கொடுக்கலாம்’ எனச் சொல்லிச்சொல்லியே பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதை நன்கு கவனித்த அந்தப் பாடகரும் ஒவ்வொரு பாடலையும் முழுதாகப் பாடாமல் பல்லவி, சரணத்தோடு மட்டும் பாடி முடித்துவிட்டு அடுத்த பாடலுக்குச் சென்றுவிடுவார். ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்து மயில்சாமி அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டார்.

ஹோட்டலைவிட்டு, வெளியில் சென்றவர் அடுத்த சில நிமிடங்களில் திரும்பிவந்து என்னிடம், ‘ஆட்டோவில் போக ரூ.50 கிடைக்குமா’ என்றார். அதுதான் மயில்சாமி. மேலும் அவர் பாரதியார் மாதிரி. பாரதியார் தன் கையில் கிடைக்கும் பணத்தை வரும்வழியிலேயே காக்கை, குருவி என எல்லாவற்றுக்கு அரிசி வாங்கிப் போடுவார். அதுபோல்தான் இவர், தன் கையில் கிடைக்கும் பணத்தை வரும் வழியிலேயே உதவி செய்துவிட்டு வந்துவிடுவார். ஒருமுறை பேருந்தைவிட்டு இறங்கியபோது, அந்த நிறுத்தத்தில் மூதாட்டியைப் பார்த்து பரிதவித்த மயில்சாமி, தன் சட்டையையே கழட்டிக் கொடுத்துவிட்டு கையில் இருந்த காசையும் கொடுத்துள்ளார்.

‘நல்லவன் வாழ்வான்’ என்பது அவர் வீட்டு வசனம்

எல்லாரும் தங்கள் சொந்த வீடுகளில் எதை எதையோ எழுதுவார்கள். ஆனால், அவர் கஷ்டப்பட்டு தாம் கட்டிய வீட்டில், ‘நல்லவன் வாழ்வான்’ என எழுதி வைத்திருக்கிறார். இதுபோல் யார், எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. மொத்தத்தில், மயில்சாமி நிறைய காசு சம்பாதித்தாரோ இல்லையோ, நிறைய நண்பர்களைச் சம்பாதித்து வைத்திருந்தார்” என்று விவேக் பேசியிருந்த பதிவுகள்தான் இன்று வைரலாகி வருகின்றன.

அதுபோல் மயில்சாமி பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் அவர், “நிறைய நாள் உயிரோடு இருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இல்லை. அதேமாதிரி இருக்கும்வரை உதவி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது” என அவர் பேசிய வீடியோ பதிவுகளும் வைரலாகி வருகின்றன. நடிகர் விவேக்கும், நடிகர் மயில்சாமியும் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் இன்றும் மக்களைச் சிரிப்பில் ஆழ்த்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com