``சினிமா வேலைக்கு போகாதன்னு எங்கிட்ட அப்பா சொல்வாங்க; ஆனா சங்கர் சார்...”- நடிகர் கார்த்தி

``சினிமா வேலைக்கு போகாதன்னு எங்கிட்ட அப்பா சொல்வாங்க; ஆனா சங்கர் சார்...”- நடிகர் கார்த்தி
``சினிமா வேலைக்கு போகாதன்னு எங்கிட்ட அப்பா சொல்வாங்க; ஆனா சங்கர் சார்...”- நடிகர் கார்த்தி

நடிகர் சூர்யா தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த திரைப்படம் விருமன். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி பேசுகையில், “எங்க அப்பா எங்கிட்ட `ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்க பெண்களை, ஜாக்கிரதையா பாத்துக்க வேண்டியது நம்ம பொறுப்புதான்’னு சொல்வாங்க” என்றுள்ளார்.

நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசுகையில், “என்னோட முதல் படமான பருத்திவீரன் படம் இங்க இதே மதுரையில்தான் தொடங்கினுச்சு. மீசை, தாடி இல்லாம அமெரிக்கால இருந்து வந்திருந்தேன்... `இவனை எப்டிங்க கிராமத்து கதைக்கு மாத்தப்போறீங்க?’னு எல்லாரும் கேட்டாங்க. அப்போ இயக்குநர் அமீர் எங்கிட்ட `10 பேரை அடிக்குற அளவுக்கு ரெடியானாதான் இந்தப் படத்துல நடிக்கமுடியும்’னு சொன்னாரு. அப்படி அமீர் சார் வளர்த்துவிட்டுதான், நான் இன்னைக்கு இங்க வரைக்கும் வந்திருக்கேன்.

அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி தொடங்கி காதல் வரை கிராமத்தில் இருக்க உறவு முறையும் வாழ்க்கை முறையும் ஏராளம். எல்லாமே நகரத்தோட ஒப்பிடுகையில் ரொம்ப வித்தியாசமானதும்கூட. அதையெல்லாம் உலகத்துக்கு காட்டணும்னா, அதுக்கு கிராமத்துக்கே வந்து அந்தக் கதையை எடுத்தால் மட்டுமே முடியும். அப்படி இங்க இருக்க கதைகளை சொல்ல, எனக்கு இயக்குநர் முத்தையா மிகப்பெரிய உந்துதல்.

பருத்துவீரன் மாதிரியான ஆழமான கிராமத்து கதையில நடிச்சபிறகு, கிராமத்து படங்கள்ல நடிக்க என்மேல நிறைய பொறுப்பு வந்துருச்சு. `மறுபடியும் நம்மளை யார் அந்தளவுக்கு மண்ணுக்குள்ள கொண்டுபோய் விடுவாங்க’னு எனக்குள்ள ஒரு பயமும் வந்திருந்துச்சு. அந்த பயத்தை உடைச்சது, முத்தையா இயக்கத்தில் நடித்த கொம்பன் படம்தான். அந்தப் படம் ஹிட்டானதில் ரொம்ப மகிழ்ச்சி.

கொம்பன் படத்துக்குப் பிறகு முத்தையா விருமன் கதை சொன்னாரு. இந்தக் கதையில, ஹீரோக்கு அவருடைய அப்பா தான் வில்லன். பொதுவா எல்லா படத்துலயும் அப்பா தான் பையனுக்கு ஹீரோவா இருப்பாரு. ஆனா இந்தப் படம் அப்படியில்ல. அங்கயே இந்தப் படம் தனித்துவமா நின்னுச்சு எனக்கு. அப்படியொரு அப்பாவா யாரை நடிக்க வைக்கலாமென யோசிச்ச போது, பிரகாஷ்ராஜ் மட்டும்தான் மனசுல வந்தார். அப்படியே அவர் படத்துக்குள்ள வந்தார். அவரோட நடித்ததில் மகிழ்ச்சி. படத்தில் வடிவுக்கரசி அம்மாவுடன் நடிச்சது, ராஜ்கிரண் சாரோடு நடிச்சதுனு எல்லாமே மகிழ்ச்சியான தருணங்கள்” என்றார்.

இதை அவர் பேசுகையில், தொடர்ந்து ரசிகர்கள் விசிலடித்து கரகோஷம் எழுப்பி வந்தனர். இதனால் கார்த்தி குறிப்பிட்டு “யோவ்... விசிலடிச்சு உங்களுக்கெல்லாம் வாய் வலிக்கலயா? மதுரையில் விழா நடத்தினால்தான் வரவேற்பு நல்லாருக்கும்னு சொல்லி நான் தான் மதுரையில விழா நடத்த ஆசைப்பட்டேன். ஆனா அதுவே இப்போ பேராசையாகிட்டுபோல” என கலகலத்தார்.

தொடர்ந்து பேசுகையில், “பொதுவாக சினிமா பிரபலங்கள், தங்களோட ஆண் பிள்ளைகளை சினிமாவுக்கு அனுப்பவே ரொம்ப பயப்படுவார்கள். எங்க அப்பாவே கூட `நீ நடிக்க போகாத’ன்னு தான் என்னை சொன்னாங்க. ஆனா சங்கர் சார், அதிதியை நடிக்க எந்தத் தடையும் விதிக்கல. அதிலிருந்தே அவர் சினிமா மீதும் இந்தத் துறையில் இருப்பவர்கள் மீதும் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. அதிதியை பொறுத்தவரைக்கு அவங்க நல்லா படிக்கிற பொன்னு. `படிக்கலனாதான் சினிமாக்கு வருவாங்க’ என்பதை மாற்றி எழுதியிருக்காங்க அதிதி. கம்ப்ளீட் பேக்கேஜ் அவங்க! வாழ்க்கையில உங்களுடைய எல்லா முடிவுகளும் நிச்சயம் சரியாகவே அமையும் அதிதி!

எங்க அப்பா எங்கிட்ட `ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்க பெண்களை, ஜாக்கிரதையா பாத்துக்க வேண்டியது நம்ம பொறுப்புதான்’னு சொல்லிதான் சினிமாவுக்கு அனுப்புனாங்க. பெண்களை ஜாக்கிரதையா பார்த்துக்குற விஷயத்துல எம்.ஜி.ஆர் சார் எப்படி இருப்பாங்க, விஜயகாந்த் சார் எப்படி இருப்பாங்கனுலாம் ரொம்ப உயர்வா சொல்வாங்க. அதலாம் பெரிய இன்ஸ்பிரேஷன் என்னைப் போன்றோருக்கு. 

இந்தப் படத்துக்காக கடைகுட்டி சிங்கத்தை அடுத்து மீண்டுமொருமுறை, அண்ணனோடு (சூர்யா) சேர்ந்து வேலை செய்திருக்கேன். அது ரொம்பவும் மகிழ்ச்சியான விஷயம். என் மீது நம்பிக்கை வைத்துதான் இந்தப் படத்தை தயாரித்ததாக அண்ணன் எங்கிட்ட சொன்னார். அவருடைய நம்பிக்கைக்காக இந்தப் படம் ஹிட்டாகனும்னு வேண்டிக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com