“ராஜ்யசபா பதவியை யாருக்கோ கொடுப்பதா?” - ஆனந்தராஜ் அதிருப்தி
அதிமுகவிற்காக உழைத்த தனக்கு ராஜ்யசபா பதவியை கொடுக்காமல் யாருக்கோ கொடுப்பதாக என நடிகர் ஆனந்த ராஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த ராஜ், “கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ பிரச்சார நபராக அதிமுகவில் பணியாற்றினேன். குறிப்பாக 7 பேர் விடுதலை தொடர்பாக ஜெயலலிதாவின் பார்வைக்கொண்டு சென்று பாராட்டை பெற்றவன். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தியை பார்த்தேன். அதில் பாஜக நிர்வாகி சுப்ரமணிய சுவாமி, தமிழகர்கள் தலைகீழாக நின்றாலும் நாங்கள் 7 பேரையும் விடுதலை செய்யமாட்டோம், மற்ற கட்சியினரை விடுதலை செய்ய விடவும் மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஆனால் தமிழகத்தின் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் 7 பேர் விடுதலை இருக்கிறது. வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு மீறும் வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யும் உரிமையை வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் தரவேண்டும்.
ஜெயலலிதா சிறுகச் சிறுக சேர்த்த வாக்கு வங்கியை தற்போது இருப்பவர்கள் கூட்டணி என யாருக்கோ தாரை வார்த்துள்ளனர். கட்சியில் உழைத்தவன் நான் இருக்கிறேன். என்னை ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யாமல், அதை பாமகவிற்கு கொடுப்பாதா? என்னைவிடுங்கள் என்னைப்போல் எத்தனையோ பேர் கட்சியில் இருக்கின்றனர். ராமதாஸ் குடும்பத்தினர் இந்த ராஜ்யசபா பதவியை தன் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு வழங்கமாட்டோம் என உறுதியாக கூறுவார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.