கொரோனா நிதியாக தங்கச் சங்கிலி வழங்கிய ஏழை மாணவிக்கு வேலை கிடைக்க நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்

கொரோனா நிதியாக தங்கச் சங்கிலி வழங்கிய ஏழை மாணவிக்கு வேலை கிடைக்க நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்
கொரோனா நிதியாக தங்கச் சங்கிலி வழங்கிய ஏழை மாணவிக்கு வேலை கிடைக்க நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்
கொரோனா நிவாரண நிதிக்காக தனது கழுத்திலிருந்த தங்கச் சங்கலியை வழங்கிய ஏழை கல்லூரி மாணவிக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
 
மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் நோக்கி காரில் வந்தபோது பொட்டனேரியில் முதல்வரை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். அங்கு காரை நிறுத்தி மக்களை பாா்த்து முதல்வர் கரம் கூப்பினார். அப்போது அங்கு நின்ற கல்லூரி மாணவி சௌமியா, கொரோனா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகக் கூறி தனது கழுத்திலிருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றி வழங்கினார். அத்துடன் தனது குடும்ப சூழ்நிலை குறித்து விளக்கி எழுதிய கடிதத்தையும் ஸ்டாலினிடம் அந்த மாணவி வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட முதல்வர், மாணவி சௌமியாவை பாராட்டினார்.
 
இந்த நிலையில் சௌமியா எழுதிய கடிதத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின் , ''மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சௌமியா எழுதிய கடிதத்தில், தான் பி.இ. படித்து முடித்துள்ளதாகவும், தனது தாய் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சமீபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், தனது தந்தை சேமித்து வைத்திருந்த பணத்தை தாயின் மருத்துவச் சிகிச்சைக்காக செலவு செய்து விட்டதாகவும், தங்களுக்கு சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், தனக்கு ஊருக்கு அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இக்கடிதத்தை படித்துப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், செளமியா படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com