கோயில் பூசாரியாக உள்ள 7 வயது சிறுவனுக்கு கல்வி கிடைக்க நடவடிக்கை வேண்டும்: நீதிமன்றம்
நீலகிரி கோயிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையின்றி கல்வி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் நெடுக்காடு கிராமத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வமான கெத்தை அம்மன் கோயிலில் பூசாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் 7 வயது சிறுவனுக்கு கல்வி தடைபடுவதாகவும், இது கட்டாயக் கல்விச் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி சிவன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் தத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேவசலு ஆகியோர் அடங்கிய அமர்வு முனபு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வீடுதோறும் கல்வி திட்டத்தின் கீழ், மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுவனுக்கு தடையற்ற கல்வி கிடைக்கவேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிறுவனுக்கு தொடர்ந்து கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். சிறுவனின் உரிமைகள் மறுக்கப்படுவது தெரிந்தால் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை மனுதாரர் அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.