சிறையில் இருந்து தப்பித்த விடுதலை புலிகள் வழக்கு: வார்டன்களை விடுவித்தது சரியே !

சிறையில் இருந்து தப்பித்த விடுதலை புலிகள் வழக்கு: வார்டன்களை விடுவித்தது சரியே !
சிறையில் இருந்து தப்பித்த விடுதலை புலிகள் வழக்கு: வார்டன்களை விடுவித்தது சரியே !


சிறையில் இருந்து விடுதலைப்புலிகள் தப்பியோடிய வழக்கில் சிறை வார்டன்களை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சதீஷ், சண்முகம், பிரதாப், விக்கி, ராஜ்குமார், சண்முகவேல், குட்டி, பாலன், பாலேந்திரன் ஆகியோர் 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி சிறையிலிருந்து தப்பினர். இவர்கள் கள்ளச்சாவியை பயன்படுத்தியும், போர்வையை கயிராக மாற்றியும் சிறையிலிருந்து தப்பித்தனர். 

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் கொடுத்த புகாரில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடினர்.

சண்முகவேல், குட்டி ஆகியோர் சயனைட் குப்பியை கடித்து தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், பாலன், பாலேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற 5 பேர் இலங்கைக்கு தப்பிச் சென்றனர். 

இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டபின், கள்ளச்சாவியும், சயனைட் குப்பிகளும் கொடுத்ததாக விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர் தளிகுமாரையும், கைதிகள் தப்பிச் செல்ல உதவியதாக சிறை வார்டன்கள் தீனதயாளன், வேலாயுதபாணி, செலிக்கா மஸ்தான், அண்ணாத்துரை ஆகியோரையும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தனர். 

இந்த வழக்கை சென்னை முதலாவது விரைவு நீதிமன்றம் விசாரித்தபோது தங்களது தப்பை பாலன், பாலேந்திரன் ஆகியோர் ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு 14 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2002ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், கியூ பிரிவு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். 

அப்போது, சிறையில் உள்ளவர்களுக்கு கள்ளச்சாவியும், சயனைட் குப்பியும் எப்படி போனது என்பதன் அடிப்படையிலேயே வழக்கு பதியப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், அரசு தரப்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்  நிரூபிக்கப்படவில்லை என்பதாலும், சிறைத்துறையில் உள்ள கடைநிலை ஊழியர்களான 5 வார்டன்கள் மீது போலீசார் குற்றம் சுமத்தியுள்ளதையும் ஏற்க முடியாது என தெரிவித்து, அனைவரையும் விடுதலை செய்து விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என கூறி காவல்துறை மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com