ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில், பெண்கள், குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர், தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்றுள்ளனர். திருச்செந்தூரில் சாமி தரிசனத்தை முடித்த அவர்கள், பின்னர் மறுபடியும் வீடு திரும்பியுள்ளனர். வேன், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே வந்தபோது, பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஒரு வயது குழந்தை, இரண்டு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 12 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வேனின் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் விபத்து நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கோபாலன் நேரில் பார்வையிட்டார். இது குறித்து செய்துங்கநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.