தமிழ்நாடு
பெரம்பலூர்: வெள்ளநீர் புகுந்ததால் கொத்து கொத்தாக உயிரிழந்த 3,500 கோழிகள்
பெரம்பலூர்: வெள்ளநீர் புகுந்ததால் கொத்து கொத்தாக உயிரிழந்த 3,500 கோழிகள்
பெரம்பலூரில் கோழிப் பண்ணைக்குள் வெள்ளநீர் புகுந்ததால் சுமார் 3,500 கோழிகள் உயிரிழந்தன.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்திலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் வேப்பந்தட்டை அருகே வயல்வெளிகளிலும் வாய்க்காலிலும் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் அனுக்கூர் அருகே உள்ள கலையரசி என்பவரது கோழிப்பண்ணைக்குள் நள்ளிரவில் புகுந்தது. இதனால் வெள்ளநீரில் சிக்கி தத்தளித்த கோழிகள் கொத்து கொத்தாக உயிரிழந்தன. இதில் சுமார் 3,500 கோழிகள் செத்து மடிந்தன. மீதமுள்ள கோழிகளும் குளிர் தாங்கமுடியாமல் இறந்து வருகின்றன.
இறந்த கோழிகளின் மதிப்பு சுமார் 6 லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறும் கோழிப்பண்ணை உரிமையாளர், ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்ப்பதால் தனியார் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது என்பதால் நஷ்டம் அனைத்தும் தங்களுக்கே என்று வேதனை தெரிவித்தார். மேலும் காப்பீட்டு தொகையையும் ஒப்பந்தம் போட்ட தனியார் நிறுவனங்களே பெற்றுக்கொள்ளும் என்பதால் தங்களின் ஒரு மாத உழைப்பு விரயமாகி விட்டதாக வேதனை தெரிவித்தார் அவர்.