சந்தோஷ்பாபுவை தொடர்ந்து ம.நீ.ம வேட்பாளர் பொன்ராஜ்-க்கும் கொரோனா தொற்று உறுதி
சென்னை அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளரும், வேளச்சேரி தொகுதி வேட்பாளருமான சந்தோஷ்பாபு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பொன்ராஜ்க்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் மக்களை சந்திக்க முடியாதது வருத்தம் அளிப்பதாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொண்டு இணைய வழியாக பரப்புரையை மேற்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொன்ராஜ் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை அவர் உடன் இருந்தவர்களும் தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை வெளியீட்டில் கமல்ஹாசனுடன் பொன்ராஜ் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.