சுருக்குமடி வலை விவகாரம்: மீனவர்கள் மோதல் தொடர்பாக விசைபடகு, வலை பறிமுதல்

சுருக்குமடி வலை விவகாரம்: மீனவர்கள் மோதல் தொடர்பாக விசைபடகு, வலை பறிமுதல்
சுருக்குமடி வலை விவகாரம்: மீனவர்கள் மோதல் தொடர்பாக விசைபடகு, வலை பறிமுதல்

சீர்காழி அருகே கடந்த 14-ஆம் தேதி வானகிரி - திருமுல்லைவாசல் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விபத்தை ஏற்படுத்திய விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப் பிரிவு போலீசார் தடைகளை மீறி மீன்பிடித்து வரும் படகுகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து சரியான முறையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என ஆத்திரமடைந்த பூம்புகார் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுருக்குமடி வலை ஆதரவு மீனவர்கள் கடந்த 14 ஆம் தேதி தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதனை அறிந்த தரங்கம்பாடி, வானகிரி மீனவர்கள் அவர்களை தடுப்பதற்கு தங்களது பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றனர். அப்போது திருமுல்லைவாசல் மீனவர்கள் விசை படகு, பைபர் படகின் மீது மோதிய விபத்தில் வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் உள்ளிட்ட 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். பூம்புகார் மீனவர்களுக்கு சொந்தமான நான்கு பைபர் படகுகளுக்கு தீ வைக்கபட்டது. இது தொடர்பாக கடலோர காவல் படையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து இரு தரப்பு மீனவ கிராமங்களிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், படகுகள் மோதலுக்கு காரணமான விசைப்படகை பறிமுதல் செய்ய திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள், பாலமுருகன், ரமேஷ் கிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் லாமேக் மற்றும் வருவாய்த் துறையினர், மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல்படையினர் இணைந்து மோதலுக்கு காரணமான விசைப்படகு மற்றும் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com