காலாவதியான ஆவின் பால் விற்பனை - ஒருவர் சஸ்பெண்ட்
ஆவின் பாலகத்தில் காலாவதியான பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, புதுக்கோட்டையில் விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் ஆவின் பால் விற்பனை நிலையம் ஒன்று உள்ளது. இன்று அந்த விற்பனை நிலையத்தில் பால் பாக்கெட்டை வாங்கிய வாடிக்கையாளர் தியாகராஜன், வெங்கடேஷ், ஆகியோர் அதில் நேற்றைய தேதி இருப்பதை கண்டு, ஆவின் மைய விற்பனையாளரிடம் முறையிட்டதோடு வேறு பால் பாக்கெட் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு ஆவின் பாலாக விற்பனையாளர் துளசிதாசன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருடன் வாடிக்கையாளர்கள் தியாகராஜன், வெங்கடேஷ் ஆகியோர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு மக்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த ஆவின் பாலக விற்பனை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வாடிக்கையாளர்களுக்கு வேறு பால் பாக்கெட் தருவதாக கூறினர். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் ஆவின் நிலையத்தின் விற்பனையாளர் துளசிதாசனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆவின் பொது மேலாளர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.