10 ரூபாய் பால் புதிய திட்டமா? அமைச்சர் விளக்கம்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ள பத்து ரூபாய்க்கு பால் பாக்கெட் விற்பனை புதியதல்ல என்று பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர். இது குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
225 மில்லி லிட்டர் அளவு கொண்ட ஆவின் பால் பாக்கெட் 10 ரூபாய் விற்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அறிவித்தார். இந்த நிலையில் 10 ரூபாய் பால் பாக்கெட் திட்டம் ஏற்கனவே பல மாவட்டங்களில் நடைமுறையில் இருப்பதாக பால் தமிழ்நாடு முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்கான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளையும் பால் முகவர்கள் வெளியிட்டுள்ளனர்.
10 ரூபாய் பால் பாக்கெட் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாக பால் முகவர்கள் கூறியதற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் சோதனை முறையில் 10 ரூபாய் பால் பாக்கெட் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்ததாக அமைச்சர் கூறியுள்ளார். தற்போது முறைப்படி 10 ரூபாய் ஆவின் பால் பாக்கெட் திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் பின்னர் தமிழகம் முழுவதும் அந்த திட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கமளித்துள்ளார்.