ஊட்டியில் திருநங்கைகள் நடத்தும் ஆவின் பாலகம் திறப்பு !

ஊட்டியில் திருநங்கைகள் நடத்தும் ஆவின் பாலகம் திறப்பு !
ஊட்டியில் திருநங்கைகள் நடத்தும் ஆவின் பாலகம் திறப்பு !

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முழுக்கு முழுக்க திருநங்கைகளே நடத்தும் ஆவின் பாலகம் திறக்கப்பட்டுள்ளது.

ஊட்டியின் சேரிங்கிராஸ் பகுதியில் இருக்கும் பூமால் வளாகத்தில் திருநங்கைகள் நடத்தும் ஆவின் பாலகம் நேற்று திறக்கப்பட்டது. ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் தொடங்கி வைத்தார். மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவும் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய வள்ளலார் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். "இந்தப் பாலகத்தை நீலகிரி சுய உதவிக்குழுவில் உள்ள 5 திருநங்கைகள் நடத்துகின்றனர். இந்தப் பாலகம் சிறப்பாகச் செயல்பட்டால் தமிழகம் முழுவதும் இத்தகைய பாலகங்கள் விரிவுபடுத்தப்படும். திருநங்கைகள் போன்ற சமூகத்தில் பின்தங்கிய மக்கள் வாழ்வாதாரம் பெரும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "திருநங்கைகள் மாடுகளை வளர்க்க வாய்ப்பிருந்தால், பால் உற்பத்தியைப் பெருக்க மாடுகள் வாங்க கடனுதவி செய்து கொடுக்கப்படும். ஆவின் நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இதுநாள் வரையில், அதிகபட்சமான விற்பனை இலக்கை எட்டியுள்ளது.
ஆவின் பொருள்கள் தூய்மையானவை, தரமானவை. மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், புதிய பொருள்களை அறிமுகம் செய்துள்ளோம். நீலகிரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் மில்மா நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் லிட்டர் அனுப்புகிறோம். கேரளா, புதுச்சேரி, தெலங்கானா மாநிலங்களில் ஆவின் பொருள்கள் விற்பனையைத் தொடங்கவுள்ளோம்" என்றார்.

கேரளாவுக்கு அனுப்பப்படும் ஆவின் பால் குறித்து விரிவாக பேசிய வள்ளலார் " நீலகிரி மாவட்டத்திலிருந்து மாதந்தோறும் கோட்டக்கல் வைத்தியசாலைக்கு 3000 கிலோ நெய் மற்றும் 1.5 டன் பால் அனுப்பப்படுகிறது. மேலும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளுக்கு ஆவின் நெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது நமது தேவையை விட அதிகமாக உள்ளது. இதனால், விற்பனையையும் அதிகரித்து வருகிறோம்" என்றார்.

இதுகுறித்து நீலகிரி சுய உதவிக்குழு தலைவர் செளம்யா கூறும் போது " திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்த முயற்சியால் திருநங்கைகளான எங்கள் நிலை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உயரும். எங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால், விற்பனை அதிகரித்து, எங்களைப் போன்ற பல திருங்கைகளுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com