நடிகர் ரூசோவிடம் ரூ.15 கோடி வாங்கிய ஆர்.கே. சுரேஷ்.. ஆருத்ரா கோல்டு மோசடி விசாரணையில் வெளிவந்த தகவல்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் 5 மாதங்களுக்கு மேலாகத் தலைமறைவாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாகக் கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

ஆருத்ரா கோல்டு நிறுவன கோப்பு படம்
ஆருத்ரா கோல்டு நிறுவன கோப்பு படம்file image

இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏஜெண்டாகச் செயல்பட்டு கைது செய்யப்பட்ட நடிகர் ரூசோவிடமிருந்து, நடிகர் ஆர்.கே.சுரேஷ் 15 கோடி ரூபாய் பணம் வாங்கியிருப்பது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனையடுத்து அவரது அலுவலகப் பணியாளர்களிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்டுள்ள பணப் பரிமாற்றம், வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை சேகரித்துள்ளனர். ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் 5 மாதங்களுக்கு மேலாகத் தலைமறைவாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள், “ஆருத்ரா வழக்கில் 40 பேர்களைக் குற்றவாளிகளாகச் சேர்த்துள்ளோம். ஹிஜாவு வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம்” என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com