சாலையில் தவறவிட்ட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பணம், நகையை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர்

சாலையில் தவறவிட்ட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பணம், நகையை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர்

சாலையில் தவறவிட்ட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பணம், நகையை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர்
Published on

தரங்கம்பாடி அருகே சாலையில் தவறவிட்ட 1.5 லட்சம் மதிப்பிலான பணம் நகையை கண்டெடுத்த இளைஞர் காவல் துறையினர் முன்னிலையில் தம்பதியிடம் ஒப்படைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த ரஜினி செல்வம் - சற்குணா தம்பதியினர் தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது கைப்பையில் ரூ. 1 லட்சம் ரொக்க பணம் மற்றும் 50 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை சற்குணா எடுத்து வந்துள்ளார். குழந்தையை வைத்துக்கொண்டே கைப்பையை பிடித்திருந்த சற்குணா சிறிது தூரம் சென்ற பிறகு தன் கையில் வைத்திருந்த கைப்பை தவறியது குறித்து அதிர்ச்சியடைந்து கணவரிடம் சொல்லியுள்ளார்.இருவரும் வந்த சாலை முழுவதும் தேடியும் கைப்பை கிடைக்கவில்லை.

இதனையடுத்து பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பொறையார் போலீசார், நண்டலாறு காவல் சோதனை சாவடியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அதே நேரம் தரங்கம்பாடி- காரைக்கால் சாலையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தம்பதி கையில் கைப்பை இருப்பதும் மற்றொரு இடத்தில் பை தவறியிருப்பதும் தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை செய்துவந்த நிலையில் தம்பதியின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்த இளைஞர் ஒருவர் அவர்கள் தவறவிட்ட கைப்பை தன்னிடம் இருப்பதாகவும். அதை பொறையார் காவல் நிலையம் வந்து பெற்றுக்கொள்ளவும் கூறினார்.

அதன் பேரில் போலீசாரும் தம்பதியும் பொறையார் காவல் நிலையம் சென்றனர். அங்கு வந்த இளைஞர் தனது பெயர் கிருஷ்ணன் என்றும் தரங்கம்பாடியை சேர்ந்தவர் எனவும் அறிமுகம் செய்ததுடன், சாலையில் கிடந்த கைப்பையை எடுத்து அதில் இருந்த சீட்டில் உங்கள் தொலைபேசி எண் இருந்ததால் தங்களிடம் நேரில் ஒப்படைக்க வந்ததாக கூறினார்.

இதனையடுத்து இளைஞர் கிருஷ்ணன் பொறையார் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பெரியசாமி, உதவி காவல் ஆய்வாளர்கள் வெங்கடாசலம், முருகவேல், கண்ணன் ஆகியோர் முன்னிலையில் தம்பதியிடம் 1 லட்சம் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்பிலான நகைகள் அடங்கிய கைப்பையை ஒப்படைத்தார். தவறவிட்ட பொருட்களை ஒரு மணி நேரத்தில் கண்டெடுத்து வழங்கிய இளைஞரின் மனிநேய செயலுக்கு ரஜினிசெல்வம் - சற்குணா தம்பதியினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com