
திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்யஸ்ரீ. இவர், திருப்பூரில உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த சத்யஸ்ரீ பணியில் மும்முரமாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நரேந்திரன் என்ற இளைஞர் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, நரேந்திரன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், படுகாயமடைந்த சத்யஸ்ரீயை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து நரேந்திரனை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சத்யஸ்ரீ, சமூக வலைதளம் மூலம் அறிமுகமான கடலூரைச் சேர்ந்த நரேந்திரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் போன் மூலமாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சத்யஸ்ரீ நரேந்திரனுடன் பேசாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரன், சத்யஸ்ரீயை சந்திக்க திருப்பூர் வந்து மருத்துவமனையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் நரேந்திரன் விசாரணையில் தெரிவிக்கும் தகவலுக்கு பின்னரே உண்மை பின்னணி என்ன என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.