சென்னை| பிறந்த குழந்தை கீழே கிடந்ததாக நாடகம்.. விசாரணையில் சிக்கிய இளைஞர்!
சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று இரவு 1:30 மணி அளவில் இளைஞர் ஒருவர் பிறந்து சில மணி நேரமேயான குழந்தை ஒன்று சாலையில் கிடந்ததாக கூறி ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒப்படைக்க கையில் குழந்தையுடன் வந்துள்ளார்.
ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு சந்தேகம் வரவே திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். கஸ்தூரிபாய் மருத்துவமனை அருகே குழந்தை கீழே கிடந்ததாகவும், தான் அவ்வழியாக வரும்பொழுது அதனை கண்டெடுத்து மருத்துவமனையில் ஒப்படைக்க வந்ததாகவும் இளைஞர் கூறியுள்ளார்.
திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இளைஞர் மீது சந்தேகம் வர, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் உண்மை வெளியானது.
பெற்ற குழந்தையை மறைக்க திட்டம்..
போலீஸார் விசாரணையில், இளைஞருக்கும் தரமணியில் உள்ள மெட்ராஸ் யூனிவர்சிட்டி விடுதியில் தங்கிப் பயிலும் மாணவி ஒருவருக்கும் பிறந்த குழந்தை என தெரிய வந்தது. மேலும் இருவரும் காதலர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மாணவிக்கு நேற்று குழந்தை பிறந்த நிலையில், மாணவி இளைஞருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக நள்ளிரவு நேரத்திலேயே அங்கு சென்ற இளைஞர் குழந்தையை துணியைச் சுற்றி கட்டப் பையில் வைத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எடுத்து வந்துள்ளார்.
மேலும், குழந்தையை கட்டப்பையில் சுற்றி மாணவியும் இளைஞரும் எடுத்து வந்த நிலையில், மாணவியை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்க வைத்து விட்டு குழந்தையை மருத்துவமனையில் கொடுக்க வந்ததும் போலீசார் விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.
7.5 மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதும், அதனை மறைப்பதற்காக இளைஞரும் மாணவியும் சேர்ந்து இப்படி ஒரு நாடகம் ஆடியதும் போலீசார் விசாரணையில் அம்பலம்.
இதனையடுத்து ஏழரை மாதத்தில் பிறந்த ஆண் குழந்தையை மீட்டு கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும், குழந்தையை பெற்றெடுத்த மாணவியையும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இளைஞரை திருவல்லிக்கேணி போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.