வங்கிக் கணக்கில் 45 ஆயிரம் எப்படி வந்தது? : கோவை பெண் குழப்பம்
கோவையை சேர்ந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் பணம் டெபாசிட் ஆகி உள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வெள்ளமடை ஊராட்சி காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன். இவரது மனைவி பிருந்தா. இவர் சாமிநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் கடந்த 2014 ம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினார். இந்த நிலையில் கடந்த 28ம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரி பார்த்தார். அப்போது கணக்கில் 45 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிருந்தா தனது கணவர் அன்புசெல்வனுடன் வங்கிக்கு சென்றார். வங்கி அதிகாரிகளை சந்தித்து இதுபற்றி தெரிவித்தனர்.
அப்போது வங்கி அதிகாரி, பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் தருகிறது. அதில் உங்களுக்கு வந்திருக்கும் என்று கூறி உள்ளார். ஆனால் பிருந்தா இதுவரை எந்தத் திட்டத்திற்காகவும் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் தனக்கு பணம் வருவதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்து உள்ளார். பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் மூலம் பணம் வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அந்தப் பகுதி மக்கள் எல்லோரும் அந்தத் திட்டத்தில் சேர முயற்சி செய்து வருகின்றனர்.