ஆடு மேய்க்கச் சென்ற பெண் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு: வடமாநிலத்தவர் காரணம் என புகார்!

ஆடு மேய்க்கச் சென்ற பெண் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு: வடமாநிலத்தவர் காரணம் என புகார்!
ஆடு மேய்க்கச் சென்ற பெண் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு: வடமாநிலத்தவர் காரணம் என புகார்!

நாமக்கல் அருகே ஆடு மேய்க்கச் சென்ற பெண், உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. வடமாநில இளைஞர்கள் கொலை செய்ததாக உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆடுமேய்க்கச் சென்ற பெண் திரும்பவில்லை!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தன் - நித்யா தம்பதியர். விவசாயியான இவர்கள் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம் போல் நித்யா, ஆடுகளை மேய்ச்சலுக்காக வீட்டின் அருகே உள்ள ஓடை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராத நிலையில் ஆடுகள் மட்டுமே வீட்டுக்கு தானாக திரும்பி வந்துள்ளது.

முட்புதரில் ரத்தக் காயங்களுடன் சடலாக மீட்பு

இந்நிலையில், விவேகானந்தன் நித்யாவை தேடிச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஓடை அருகே முட்புதரில் அரை நிர்வாண கோலத்தில் முகம், கழுத்துப் பகுதியில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல் துறையினருக்கு விவேகானந்தன் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? பாலியல் வன்கொடுமையா?

இதைத் தொடர்ந்து ஆடு மேய்க்கச் சென்ற நித்தியா, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகைகளை திருடுவதற்காக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சடலத்தை வைத்திருந்தால் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் போலீசார் சடலத்தை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வடமாநில தொழிலாளர்கள் காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

இதையடுத்து அங்கு பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால், சடலத்தை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் நித்யாவை கொலை செய்தது வடமாநில தொழிலாளர்கள் தான் எனக் கூறி நாமக்கல் - மோகனூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

உடலை வாங்க மறுத்த உறவினர்கள் - மருத்துவமனையில் இருக்கும் சடலம்

இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை வாங்கப் போவதில்லை எனக் கூறி நித்யாவின் குடும்பத்தாரும், உறவினர்களும் நாமக்கல்லில் இருந்து சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நித்யாவின் சடலம் நாமக்கல் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. ஆடு மேய்க்கச் சென்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com