‘கொலை செய்துவிடுவோம் என மிரட்டுகிறார்கள்’ காதலனை கரம் பிடித்த பெண் போலீசில் தஞ்சம்!
சிவகங்கை மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. அப்பகுதியில் உள்ள அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் காயத்ரியை விட பதினேழு வயது மூத்தவரான அவரது தாய்மாமன் முத்துலிங்கத்திற்கு காயத்ரியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்கள் அவரது குடும்பத்தினர்.
அதனால் அங்கிருந்து இருபது கிலோமீட்டர் தூரமுள்ள மோசக்குடிக்கு வலுகட்டாயமாக காயத்ரியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து தப்பிய காயத்ரி அலெக்ஸ் பாண்டியனோடு திருப்பூர் வந்து கடந்த 2 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனை அறிந்த காயத்ரியின் தாய்மாமன்கள் முத்துலிங்கம் மற்றும் முருகன் உட்பட உறவினர்கள் அலெக்ஸ் பாண்டியனின் வீட்டிற்கு சென்று காயத்ரியையும், அலெக்ஸ் பாண்டியனையும் எங்கு பார்த்தாலும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து புதுமண தம்பதியர் இருவரும் தஞ்சமடைந்துள்ளனர்.