6 குழந்தைகளுடன் மயானத்தில் குடியிருந்த பெண் - ஊரடங்கால் ஊர் திரும்பாத கணவன்..!

6 குழந்தைகளுடன் மயானத்தில் குடியிருந்த பெண் - ஊரடங்கால் ஊர் திரும்பாத கணவன்..!

6 குழந்தைகளுடன் மயானத்தில் குடியிருந்த பெண் - ஊரடங்கால் ஊர் திரும்பாத கணவன்..!

விழுப்புரம் மாவட்டம் சோ.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா. பிரமிளா சிறு வயதாக இருக்கும் போதே, அவரது தாய் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் நடுத்தெருவில் நின்ற பிரமிளாவை அவரது தந்தையின் தாயார் எடுத்து வளர்த்து வந்துள்ளார். பாட்டியின் இயலாமை மற்றும் ஏழ்மை காரணமாக சிறு வயதிலேயே சோ.குப்பம் பகுதிகளில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த பிரமிளா அங்கேயே உணவையும் உண்டு நாட்களை கழித்து வந்துள்ளார்.

உள்ளூரிலேயே வீட்டு வேலைகளை செய்து வந்த பிரமிளா, வறுமையின் காரணமாக சென்னை, பெங்களூர் போன்ற இடங்களிலும் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது பிரமிளாவின் கிராமத்திற்கு அருகில் உள்ள கலத்தம்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கலத்தம்பட்டில் உள்ள முருகனுக்கு தாத்தா வீட்டிற்கு வந்த அவர்கள் அங்கேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இவர்களுக்கு 6 குழந்தைகள் பிறந்தன. அந்த வீட்டிலேயே முருகனின் தாய் மாமாவின் குடும்பமும் வசித்து வந்ததாக தெரிகிறது. முருகன் கூலித் தொழிலாளி என்பதால் அடிக்கடி பெங்களூர் சென்று வருவார் எனக் கூறப்படுகிறது. இதனால் பிரமிளாவுக்கும், முருகனின் தாய்மாமா குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சண்டையின் போது அவர்கள் பிரமிளாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாது நின்ற பிரமிளா முருகனின் தாத்தா பாட்டியை அழைத்துக் கொண்டு கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு அருகில் ஒரு சிறிய பரப்பில் தார்பாய் அமைக்க முயன்றுள்ளார். ஆனால் அதனருகில் இருந்த மக்கள் அதனை அனுமதிக்கவில்லை.

இதனால் வேறு வழியேயில்லாமல் பிணங்களை எரித்து விட்டு, பணப்பட்டுவாடா நடத்தும் அறைக்கு சென்று தார்பாய்களை சுற்றிக்கட்டி அங்கேயே வசித்து வந்துள்ளார். பிணங்கள் வரும் போது மட்டும் தன்னுடைய தார்பாய், பாத்திரங்கள் என எல்லாவற்றையும் எடுத்து விட்டு, அவர்கள் போன பின்னர் மீண்டும் அங்கேயே தார்பாய் அமைத்து தங்கி வாழ்வை கழித்து வந்துள்ளார். ஒரு மாதத்தில் பெங்களூருக்கு சென்ற முருகன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்ததால் இன்று வரை ஊர் திரும்ப முடியவில்லை என தொலைப்பேசி வாயிலாக கூறியுள்ளார். இதனால் 2 மாத கைக்குழந்தையை வைத்து கொண்டு அன்றாட பிழைப்புக்கு கடும் அவதிப்பட்டு வந்துள்ளார் பிரமிளா.

இதனையடுத்து தகவலறிந்த தன்னார்வலர்கள், காவலர்கள் அவர்களுக்கு தேவையான உணவை வழங்கியுள்ளனர். அதன் பின்னர் தகவலறிந்து வந்த செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டாட்சியர் அவர்களுக்கு ஊரின் உள்ளே ஒரு வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்து அதற்கான வாடகையை அரசே செலுத்தும் என உறுதியளித்துள்ளனர். மேலும், ஊரடங்கு முடிந்த பின்னர் அவர்களுக்கு சொந்த வீடு அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

இது குறித்து பிரமிளா கூறும் போது, “ஒரு மாசத்துக்கு முன்னாடி வேலைக்காக பெங்களூருக்கு போனவரு ஊரடங்கால் இன்னும் ஊர் திரும்பமுடியாம இருக்காரு. போன் மட்டும் பேசுவார். எங்களுக்கு ரேஷன் கார்டும், ஆதார்டு கார்டும் வேணும். வீடு இல்லாம நானும் எனது குழந்தைகளும் ரொம்ப அவதிப்பட்றோம். அதனால எங்களுக்கு அரசாங்கம் ஒரு வீடு மட்டும் கட்டி தரனும்னு தாழ்மையா கேட்டுகிறன்” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com