விபத்தில் இறந்த பெண் : சடலத்துடன் போராடிய மக்கள்
கன்னியாகுமரியில் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் பகுதியை சேர்ந்த ஜான்சிபாய் (38). இவர் கடந்த 6ம் தேதி அருகிலுள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அவர் சாலையோரமாக நடந்து சென்றபோது, அவ்வழியாக சென்ற இரு சக்கர வாகனம் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ஜான்சிபாய், திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றும், பலனின்றி இறந்தார்.
விபத்து தொடர்பாக மோதிய வாகனத்தின் பதிவு எண்ணுடன், திருவட்டார் காவல்நிலையத்தில் அப்பகுதியினர் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாததால் ஆத்திரமடைந்த மக்கள், இன்று ஜான்சிபாயின் சடலத்துடன் திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பின்னர் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.