ஒரு வாக்காளருக்கு ரூ.4000.....மொத்தம் 89 கோடி... அதிர்ச்சியளிக்கும் ஆவணங்கள்..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் ரூ. 4 ஆயிரம் வீதம் 89 கோடி வரையில் செலவழிக்க வழங்க அதிமுக அம்மா அணி திட்டமிட்டிருந்தது வருமானவரிச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவந்தனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம் மற்றும் புதுக்கோட்டையில் அவருக்கு சொந்தமான குவாரி, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வெளியானது. இதில் ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வது தொடர்பான ஆவணங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதில் ஆர்.கே.நகரில் உள்ள மொத்த வாக்காளர்களில் 85 சதவிகிதம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்ய அதிமுக அம்மா அணி திட்டமிட்டிருந்ததும், அதற்காக ரூ.89.65 கோடி வழங்க இருந்ததும் தெரியவந்துள்ளது. ஆவணங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பெயர்கள் இருந்தன. இத்தனை வாக்காளர்களுக்கு இவர் பொறுப்பு என அந்த ஆவணத்தில் ஒவ்வொருவரின் பெயரும் குறிப்பிடப்பட்டு, அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும் பணமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் 10 கோடிக்குக் குறையாமல் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.