நீலகிரி மாவட்டம் கூடலூர் குடியிருப்புக்குள் புகுந்த மக்னா யானை.. களமிறங்கிய வனத்துறையினர்!!
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி & மகேஷ்வரன்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் இன்று காலை மக்னா யானை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர் அருகே உள்ள புத்தூர்வயல், தொரப்பள்ளி, எழுமரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மக்னா யானை தொடர்ந்து நடமாடி வருகிறது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே யானை வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மக்னா யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் யானையை விரட்டும் பணி நேற்று மாலை முதல் தொடங்கியது.
இந்த நிலையில், இன்று காலை மக்னா யானை புத்தூர்வயல் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும், யானை பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் செல்லாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பான முறையில் அதை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். யானை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே நடமாடி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

