போலீஸ் வீட்டில் கொள்ளை - நகைகளோடு திருடன் கைது
ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வீட்டில் பட்டபகலில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டது.
சென்னை வேளச்சேரி லட்சுமி நகரில் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் தேவராஜ் (66) தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 12ம் தேதி துக்க நிகழ்விற்காக உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அத்துடன் பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. இதைக்கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக வேளச்சேரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வேளச்சேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் வேலு, ஆய்வு மேற்கொண்டு கைரேகை நிபுணர்கள் உதவியோடு கைரேகைகளை பதிவு செய்தார். பின்னர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தங்க நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வந்தார்.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு 4 மணி நேரத்தில் கொள்ளையன் யார் என்பதை கண்டறிந்து, 7 நாட்களில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை ஆய்வாளர் வேலு தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் சிதம்பரத்தை சேர்ந்த சிவா (எ) பவன்(23) என்பது தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடைய மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 40 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில் கொள்ளையன் அளித்த வாக்குமூலத்தில், பகல் 12 மணி முதல் 4 மணி வரை நோட்டமிட்டு ஆள் இல்லாத வீட்டை தேர்வை செய்து 10 நிமிடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடுத்து விடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திருடன் இதுவரை 2 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்று வெளியில் வந்தவர். இவர் மீது 20க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை முழுவதும் கொள்ளையடித்து வந்த நபரை கைது செய்த தனிப்படையை சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீதர், மனோகரன், காவலர்கள் அச்சுதராஜ் உள்ளிட்டவர்களை கிண்டி உதவி ஆணையர் பாராட்டினார்.