150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்
150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை செங்குன்றம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அனுப்குமார் (32). இவர் வீட்டில் கோழிகளை வளர்த்து விற்பனை செய்வதுபோல் வாழ்ந்துள்ளார். தினமும் வீட்டிலிருந்து புறப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிடுவார். அவ்வாறு செல்லும் இவர், பல பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டமிட்டுள்ளார். ஆளில்லா வீடுகளை தொடர்ந்து நோட்டமிட்ட இவர், அந்த வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கொள்ளையடித்து வந்துள்ளார். இவ்வாறு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொள்ளையடித்து 150 சவரன் நகையை தனது வீட்டில் புதைத்து வைத்துள்ளார். தனக்கு தேவைப்படும் போது நகைகளை சிறிய அளவில் விற்று பணம் பெற்றுள்ளார். அந்தப் பணத்தைக்கொண்டு மது, பெண்கள் என வாழ்ந்துள்ளார்.
இவர் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு செல்ல கால்டாக்ஸிகளை பயன்படுத்தியுள்ளார். கொள்ளைபோன வீடுகளின் அருகே இருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், அனைத்து இடங்களுக்கும் கால்டாக்ஸி பயன்படுத்தப்பட்டிருப்பதை வைத்து விசாரணை செய்துவந்துள்ளனர்.
இந்நிலையில் வேளச்சேரியில் ஏழுமலை என்பவரிடம் அனுப்குமார் கத்தியைக்காட்டி ரூ.4 ஆயிரத்தை பறித்துள்ளார். அப்போது அவரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் தான் அரங்கேற்றிய கொள்ளை சம்பவங்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். 3 மாவட்டங்களில் உள்ள பல வீடுகளில் கொள்ளை அடித்துள்ளதையும் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே 15 வழக்குகள் இருந்துள்ளன.
விசாரணைக்கு பிறகு அவரிடம் இருந்து 150 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் கால்டாக்ஸி புக் செய்ய பயன்படுத்திய செல்போனையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பல இடங்களில் திருடிய இவரை சாமர்த்தியமாக பிடித்த, வேளச்சேரி சட்டஒழுங்கு ஆய்வாளர் வேலு, உதவி ஆய்வாளர்கள் விஸ்வநாதன், ஸ்ரீதர், முதல்நிலைகாவலர் அச்சுதராஜ் ஆகியோரை அடையார் மாவட்ட காவல் துணை ஆணையர் செஷாங் சாய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டினர்.