”அவர்கள் அழும்போது கொண்டாட்டத்தில் இருக்க முடியாது"-ஈழத்தமிழர்கள் மீது தீராப்பற்று கொண்ட விஜயகாந்த்!

”ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது" என்று ஈழத்தமிழர்களுக்காக தன் பிறந்த நாள் கொண்டாடுவதையே விஜயகாந்த் தவிர்த்தார்.
விஜயகாந்த்
விஜயகாந்த்ட்விட்டர்

தமிழ் ஈழத்தை மையமாக வைத்து அரசியல் நடத்தும் பழக்கம் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவையே சூழ்ந்துள்ள்ளது. அங்குள்ள தமிழ் மக்களின் உணர்வுகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் பின்னால் இருப்பது மிகப்பெரிய அரசியல். ஆனால், இந்த அரசியலுக்குள் நுழையாமல் உண்மை உணர்வுடன், அந்த ஈழ மக்களுக்காகவும் உழைத்தவர் காலஞ்சென்ற கேப்டன் விஜயகாந்த்.

பிரிவினையை மக்களிடம் விதைக்காமல் இந்தியனாக, தமிழனாக உணர்வுகளை மக்களிடம் விதைத்தவர், அவர். குறிப்பாக அவர், ஈழத்தின்மீது அதிக பற்று கொண்டிருந்தாலும், ஒருநாளும் அதைவைத்து அரசியல் ஆதாயம் பெற்றதில்லை. அதனால்தான், தனித் தமிழீழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைத் தன் தலைவனாக ஏற்று, அதன் வழியில் தன் பயணத்தைத் தொடங்கியவர் விஜயகாந்த். அதன் சாட்சியாக தனது மூத்த மகனுக்கு `விஜய பிரபாகரன்’ என பெயர்வைத்தார்.

மேலும், மேலும், தனது 100வது படத்துக்கு `கேப்டன் பிரபாகரன்’ எனப் பெயர்வைத்தார். இன்னும் சொல்லப்போனால், 1980-களின் பிற்பகுதியில் இலங்கையில் ஈழத்தமிழர்கள்மீது சிங்களவர்கள் புரிந்த கொடூரமானத் தாக்குதலில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதைக் கண்டு கொதித்தெழுந்த விஜயகாந்த், ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தினார். பின்னர், 1986ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அதை தடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த்.

இது தவிர, தொடர்ந்து தமிழ் ஈழத்தின் மீதும், அதன் தமிழர்கள்மீதும் மிகுந்த பற்று கொண்டிருந்தார். அகதிகளாக தமிழகம் நோக்கிவந்த இலங்கைத் தமிழர்களின் முகாம்களில் நேரிடையாகச் சென்று அவர்களுக்கு உதவிகள் வழங்கியதுடன், தொடர்ந்து தனது ரசிகர்கள் மூலம் நிதியுதவி அளிக்கச் செய்துவந்தார். எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே சென்று, ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களுக்காக தனது பிறந்தநாள் கொண்டாடுவதையே தவிர்த்தார். ”ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது" என்று ஈழத்தமிழர்களுக்காக தன் பிறந்த நாள் கொண்டாடுவதையே தவிர்த்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com