37 ஆம் ஆண்டில் பாமக! முலாயம் சிங், லாலு பிரசாத் போல் ராமதாஸ் முதலமைச்சர் ஆகாதது ஏன்?
“நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக” என்று இந்திரா காந்திக்கு கலைஞர் கருணாநிதி அழைப்பு விடுத்தது போன்ற எண்ணற்ற அரசியல் முழக்கங்களை கண்டதுதான் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருந்த சீரணி அரங்கம். என்னது, மெரினா கடற்கரையில் அரசியல் கூட்டங்கள் நடத்த முடியுமா என்றுகூட இன்றுள்ள தலைமுறையினர் ஆச்சர்யமாக கேட்கலாம்.. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தவிர, வேறு எதையும் இன்றைய தலைமுறையினர் அங்கு கண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், சீரணி அரங்கத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ’பாட்ஷா’ படத்தின் ஃபிளாஷ்பேக்கைப்போல் அண்ணா தொடங்கி ஜெயலலிதா வரை பலரின் மாஸ் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
அப்படியான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சீரணி அரங்கில் இதே நாளில்தான் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தரமான சம்பவம் அரங்கேறியது. ஒட்டுமொத்த அரசியல் களத்தையே திரும்பிப் பார்க்கவைத்து அந்தச் சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியவர்தான் மருத்துவர் ராமதாஸ்.. அவருக்கே உரித்தான தமிழ் அழகோடு சொல்ல வேண்டுமென்றால், மருத்துவர் ச.ராமதாசு ஒன்றல்ல, இரண்டல்ல... 10 லட்சம் மக்களைத் திரட்டி 1989ஆம் ஆண்டு ராமதாஸ் உருவாக்கிய பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் அமைப்பு இன்று 37ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வன்னியர் சங்கமாக தொடங்கி, பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியாக உருப்பெற்று தமிழ்நாட்டின் முன்னணி முற்போக்கு சக்தியாக விளங்கி அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியது. பீகார், உத்தரப்பிரதேசத்தில் உருவான பிற்படுத்தப்பட்ட அரசியல் கட்சிகளைப்போல் தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பு பாமகவுக்கும், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் போல் தேசிய அளவிலான தலைவராக உருவாகும் வாய்ப்பு ராமதாஸுக்கும் இருந்தும் ஏன் இவை எதுவும் நடைபெறவில்லை என்று இந்தக் கட்டுரை அலசுகிறது.
அரசியல் எனும் பேராயுதம்..
வஞ்சிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான உரிமைகளைத் தாங்களே கேட்பதற்கான ஆயுதமே சங்கம், கட்சி, இயக்கம் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்கள். பாதிக்கப்பட்ட மக்கள் தனியாக குரல் கொடுக்கும்போது அதிகார வர்க்கத்தாலோ, அரசு எந்திரத்தாலோ, பணக்கார வர்க்கத்தாலோ எளிதில் அடக்கப்பட்டு விடுவார்கள். அவர்களோ அமைப்பாக திரண்டு விட்டாலோ, அரசியல் கட்சியாக ஒருங்கிணைந்துவிட்டாலோ நிச்சயம் அவர்களின் குரல்களுக்கு ஆளும் வர்க்கங்கள் நிச்சயம் செவிமடுக்கும். அத்தகைய வலிமையான அரசியல் எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்து பல லட்சம் மக்களைப் போராட்டக் களத்திற்கு திரட்டிக்கொண்டு வந்தவர்தான் மருத்துவர் ராமதாஸ்.
ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்து மருத்துவம் படித்து, அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பின்பு மக்களின் மருத்துவராக, அதாவது அஞ்சு ரூபாய் மருத்துவராக வலம்வந்த ராமதாஸ்தான் பின்னாளில் மக்களின் நம்பிக்கை பெற்ற அரசியல் தலைவராக உருமாறினார். எடுத்த எடுப்பிலேயே அவர் அரசியல் கட்சியை உருவாக்கிவிடவில்லை. 1980-கள் முழுவதும் போராட்டக் களத்தில் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று பிற்படுத்தப்பட்ட நிலைமையில் இருந்த வன்னியர் சமுதாய மக்களுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
சிதறிக்கிடந்த பல்வேறு வன்னியர் அமைப்புகளை ஒன்றிணைத்து `வன்னியர் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 1980-ஆம் ஆண்டு, ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி, வன்னியர் மக்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை ஓயாமல் நடத்தினார்.
வன்னியர் சங்கத்தைத் தொடங்கியபோது..
1. எந்தச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அது என் சொந்தச் செலவில்தான்!
2. எந்தக் காலகட்டத்திலும் நான் கட்சியிலோ, சங்கத்திலோ எந்தப் பொறுப்பும் ஏற்கமாட்டேன்!
3. எந்தத் தேர்தலிலும் நான் நிற்கமாட்டேன்!
என மூன்று சத்தியங்கள் செய்தார். உபசத்தியமாக, “என் வாரிசுகளோ, குடும்பமோ இந்த இயக்கத்தினுள் என்றைக்கும் வர மாட்டார்கள். இவை என் இறுதிமூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.
வன்னியர் சங்கத்தின் தொடர் போராட்டங்கள் 1987ஆம் ஆண்டு உச்சம் தொட்டது. எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த அந்த நேரத்தில் போராட்டங்களின்போது வன்முறைகள் அரங்கேறியதாக கூறி காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியானார்கள். இந்தப் போராட்டங்களின் விளைவாக கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தபிறகு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பிரிவை உருவாக்கி 20 சதவீத இடஒதுக்கிட்டைப் பிரித்துக் கொடுத்தார். ஆனாலும், வன்னியர்களுக்கு என்று தனியாக இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி அதனை விமர்சனம் செய்தார் ராமதாஸ். விமர்சனம் செய்த கையோடு, அரசியல் கட்சியாக உருவாவதே இதற்குத் தீர்வு என்ற முடிவை எடுத்தார்.
இதே நாளில் சென்னை கடற்கரை சீரணி அரங்கில் 10 லட்சம் மக்கள் புடைசூழ பாட்டாளி மக்கள் கட்சியைத் தோற்றுவித்தார் மருத்துவர் ராமதாஸ். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள், மதச்சிறுபான்மையோர் ஆகியோரை அடையாளப்படுத்தும் வகையில் தங்களின் கட்சிக் கொடியை வடிவமைத்தார். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை தங்களின் வழிகாட்டிகளாக அறிவித்தார். தங்கள் கட்சியின் பொதுச் செயலாளாரக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இருக்க முடியும் என்கிற வகையில் கட்சியின் பை லாவை நிர்மாணித்தார். கட்சியின் தலைவராகப் பேராசிரியர் தீரனும், பொதுச் செயலாளராக தலித் எழில்மலையும் அறிவிக்கப்பட்டனர்.
முற்போக்கு முகமாக விளங்கிய பாமக & ராமதாஸ்
ஒரு கட்சி அல்லது தனி நபர், அந்தச் சமுதாயத்தின் எப்பொழுது முகமாக விளங்கும் என்றால், சம காலத்தில் அறிவுஜீவிகள் மத்தியில் அவர்கள் போற்றப்படும்போதுதான். பாமக என்ற கட்சி ஆரம்பித்த 1990களில் தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளாக கருதப்பட்ட அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, தியாகு, ரவிக்குமார் (விசிக), பழமலய், பிரபஞ்சன், பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள், பெ.மணியரசன், பழ.நெடுமாறன் போன்ற பலரும் ராமதாஸைப் போற்றி புகழ்ந்து எழுதியிருக்கிறார்கள். தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்கு இணங்க செயல்பாடுகளிலும் அவர் செய்துகாட்டியதாக அவர்கள் கொண்டாடினார்கள்.
இதில் இரண்டு முக்கியமான விஷயங்களை சுட்டிக் காட்டலாம்..
1. தமிழ் உணர்வை வளர்க்க தொடர் முயற்சிகள் மேற்கொண்டது.. தமிழ்மொழி வளர்ச்சிக்காக `பொங்கு தமிழ்’ அறக்கட்டளையை ஆரம்பித்தார். `அலை ஓசை’ செய்தித்தாள், `மக்கள் தொலைக்காட்சி’ போன்ற செய்தி ஊடகங்களைத் தொடங்கி பிறமொழிக் கலப்பில்லாத தனித்தமிழை வளர்த்தெடுத்தார். இக்கட்டான சூழலில் பிரபாகரனை முன்னிலைப்படுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்.
2. பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். அம்பேத்கர் சிலைகளை அதிக அளவில் நிறுவினார். பட்டியலின மக்கள் பாதிக்கப்படும்போது களத்திற்கே சென்று குரல் கொடுத்தார். ராமதாஸின் இத்தகைய செயல்களை பாராட்டித்தான் திருமாவளவன் அவருக்கு ’தமிழ் குடிதாங்கி’ என்ற பட்டப்பெயரை கொடுத்தார்.
தமிழகத்தில் ஒரு கட்சி தொடங்கப்பட்டு மூன்று தேர்தலில், பிரதான இருபெரும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்றது பா.ம.க-வின் மீது அனைவரின் கவனத்தையும் திருப்பியது. தொடர்ந்து தேர்தல் களத்திலும் ஆதிக்கம் செலுத்தியது.
எங்கே தொடங்கியது சறுக்கல்..
அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைகளின் முன்னிறுத்தி அரசியல் களத்திற்கு வீறுநடை போட்ட பாமக, அந்த சிந்தனை போக்கிற்கு நேர் எதிர் திசையில் பயணிப்பதாக விமர்சனங்களுக்கு ஆளாகி நிற்கின்றது. தமிழ் தேசிய உணர்வு, சமூக நீதி போன்ற அர்த்தங்களில் பொது தளத்தில் நின்று முன்னேறி இருக்க வேண்டிய பாமக, வெறும் சாதியரீதியான ஒருங்கிணைப்பில் தன்னை சுருக்கிக்கொண்டதே பரிதாபம்.
பட்டியலின மக்களுக்காக குரல் கொடுத்த கட்சிக்குள்ளே நிரந்தரமான இடம்கொடுத்த அந்தக் கட்சிதான் இரு சமுதாயங்களுக்கு இடையிலான மோதலுக்கும் முக்கியக் காரணமாக அமைந்து வருவதாக விமர்சிக்கப்படுகிறது. சித்திரை முழுநிலவு மாநாடுகளில் பேசப்படும் பேச்சுகள், சாதியை வெளிப்படையாகவே ஆதரித்துப் பேசுவது என்று பெரிய அளவில் விஸ்தாரமாக மாற வேண்டிய பாமக, சாதியக் கட்சியாக சுருங்கி போய் நிற்பதாகவே உள்ளது. எந்தச் சாதிய கட்டமைப்பை வைத்து வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி இடஒதுக்கீட்டிற்காகப் போராடியதோ, அதே சாதிய பெருமிதங்களை வளர்ப்பதற்கு முக்கியக் காரணமாக மாறி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் கட்சியை வளர்க்க முடியாமல் போனதும் பாமகவின் சறுக்கலுக்கு முக்கியக் காரணம். வலிமையான இரண்டாம்கட்ட தலைவர்களை உருவாக்காமல் வாரிசு அரசியலையும் புகுத்தியதால் மேலும் சறுக்கல் அதிகமானது.
தொடர்ச்சியாக மாறிமாறி கூட்டணி வைத்தது பாமக மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது. ஒரேநேரத்தில் இரு கட்சிகளுடன் பேரம் பேசுவது போன்ற விமர்சனங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
டைம் லைனில் பாமக வரலாறு:
37வது ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி
1980 - வன்னியர் சங்கத்தைத் தொடங்கினார் மருத்துவர் ராமதாஸ்
1989: பட்டாளி மக்கள் கட்சி (PMK) அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது.
1989 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 6 சதவீத வாக்கு வங்கி
1991: முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1 இடத்தில் வெற்றி
1996 - சட்டமன்றத் தேர்தலில் புதிய அணியை உருவாக்கி 4 தொகுதியில் வெற்றி
1998: NDA கூட்டணியில் இணைந்து 4 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி
1999: மீண்டும் NDA கூட்டணி – 5 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி
2001: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி.
2004: காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து 5 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி.. அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆனார்.
2006 - சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி.
2009 - நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி
2011 - சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றி.
2014: NDA கூட்டணியில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 1 இடத்தில் வெற்றி.
2016: சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி – 5.36 சதவீத வாக்கு வங்கி
2019: NDA கூட்டணியில் போட்டியிட்டுத் தோல்வி
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி.
மே 28 2022: அன்புமணி ராமதாஸ் கட்சித் தலைவராக நியமனம்
2024: NDA கூட்டணியில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வி