ஆளுக்கு 117 தொகுதி, 30 மாதங்கள் ஆட்சி| அதிமுக, தவெக கூட்டணி? எடுபடுமா, விஜயின் ’கர்நாடகா’ ஃபார்முலா?
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஆளுக்கு சரிபாதியாக 117 தொகுதிகள், ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் 30 மாதங்கள் முதல்வர் பதவி என கர்நாடகா பாணியில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன..,ஏற்கெனவே, தவெகவுக்கு 80 இடங்கள், விஜய்க்கு துணை முதல்வர் பதவி என ஆந்திரா பாணியில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இப்படியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன..,நடப்பது என்ன?..,விரிவாகப் பார்ப்போம்..,
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலத்துக்கும் மேலாக இருக்கும்போதும், இப்போதே கூட்டணி தொடர்பான செய்திகள் அலையடிக்க ஆரம்பித்துவிட்டன..,பெயர் மாறினாலும், 2019-லிருந்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மிக வலிமையான கூட்டணியாக வெற்றிவாகை சூடிவருகிறது..,மறுபுறம், 2019, 2021 தேர்தல்களில் ஒரே அணியில் தேர்தலைச் சந்தித்த அதிமுக, பாஜக, பாமக கூட்டணியில் விரிசல் உண்டானது..,2024 தேர்தலில், அதிமுக தனி அணியாகவும் பாஜக தனி அணியாகவும் போட்டியிட்டன..,தற்போது வரை அந்த நிலையே தொடர்ந்து வருகிறது.இந்தநிலையில், 2026 தேர்தலில் வலிமையான கூட்டணி அமைக்கவேண்டிய கட்டாயத்தில் அதிமுகவும் பாஜகவும் இருக்கின்றன...பாஜக தலைமை அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது..,ஆனால், மறுபுறம் அதிமுகவோ, பாமக,தவெக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன..,
இது ஒருபுறமிருக்க, புதிய வரவாக வந்திருக்கும் தவெக தங்களின் தலைமையில்தான் கூட்டணிஎன முதல் மாநாட்டிலேயே அறிவித்தது..,இருந்தபோதும், கடந்தாண்டின் பிற்பகுதியில், அதிமுக, தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வெளியாகின..,திமுகவை மிகக் கடுமையாக விமர்சிக்கும் விஜய், அதிமுக விமர்சிக்காமல், மென்போக்கைக் கடைபிடித்து வருவது அதற்காகத்தான் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர்..,அதிமுக கூட்டணியில் தவெகவுக்கு 80 தொகுதிகள், விஜய்க்கு துணை முதல்வர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்பட்டது..,இந்தநிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிமுகவுடன் கூட்டணி இல்லை, பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் விளக்கமளித்தார்..,
இந்தநிலையில், கடந்த வாரம் அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் விஜயைச் சந்தித்துப் பேசினார்..,15 முதல் 20 சதவிகித வாக்குகள்வரை தவெகவுக்குக் கிடைக்கும் என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகின..,தவிர, அதிமுகவும் தவெகவும் ஓரணியில் இணைய அவர் ஆலோசனை வழங்கியதாகவும் சொல்லப்பட்டது..,அதனைத் தொடர்ந்து மீண்டும் அதிமுக, தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..,ஆனால், கடந்த காலத்தில் சொல்லப்பட்டதுபோல, தவெகவுக்கு 80 தொகுதிகள், விஜய்க்கு துணை முதல்வர் பதவி என்றில்லாமல், மொத்தமுள்ள 234 தொகுதியில் ஆளுக்கு சரிபாதியாக 117 தொகுதிகள்,,,அதேபோல, ஆட்சிக்காலமான 5 ஆண்டுகளில் ஆளுக்கு 2.5 ஆண்டுகள் அதாவது முப்பது மாதங்கள் என கர்நாடகாவில் கடந்த காலத்தில், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கிடையில் நிகழ்ந்ததைபோல ஒரு உடன்படிக்கையோடு தவெக பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது..,
முதல் மாநாட்டிலேயே, தங்கள் தலைமையில்தான் கூட்டணி எனச் சொல்லிவிட்டு, 80 தொகுதிகள், துணை முதல்வர் பதவி என அதிமுகவிடம் கூட்டணிக்குப் போனால் மக்களிடம் நம்பகத்தன்மை அடிபட்டுப்போகும் என்பதாலேயே இப்படியொரு யுக்தியை தவெக கையிலெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது..,ஆனால், ``தமிழ்நாட்டை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த கட்சி, தற்போது 66 எம்.எல்.ஏக்களோடு எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக ஒருபோதும் இதுபோன்ற உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ளாது..,தவிர, இதுபோன்ற உடன்படிக்கைகள் தோல்வியில்தான் முடியும்’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்