“டீச்சர் ஆகணும் அங்கிள்” - எலும்பு மஜ்ஜை நோயில் வாடும் ஆர்த்தியின் கனவு

“டீச்சர் ஆகணும் அங்கிள்” - எலும்பு மஜ்ஜை நோயில் வாடும் ஆர்த்தியின் கனவு
“டீச்சர் ஆகணும் அங்கிள்” - எலும்பு மஜ்ஜை நோயில் வாடும் ஆர்த்தியின் கனவு

நோயினால் உடல் நொறுங்கியபோதும், படிப்பில் ஏற்பட்ட ஆர்வத்தால் கல்வியில் சாதித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவி.  கையெழுத்து, படைப்பாற்றல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் தன்னம்பிக்கை சிறுமி. 

படிப்பில் சாதிக்க துடிக்கும் சிறுமி ஆர்த்தி. 14வயதாகும் இவர், பிறந்து 6 மாதங்களில் எலும்பு மஜ்ஜை பாதிப்பால் பாதிக்கப்பட்டு, நடக்க, உட்கார முடியாத நிலைமைக்கு ஆளானார். படிப்பில் ஆர்வம் மிகுதியால் கோவை குரும்பப்பாளையம் உயர்நிலை பள்ளியில் தற்போது எட்டாம் வகுப்பு படித்து வரும் ஆர்த்தி, பள்ளியில் ஆசிரியர்கள், சக மாணவர்கள், வீட்டில் தாய், சகோதரர் உதவியுடன் கல்வியை விடாமுயற்சியுடன் முன்னெடுத்து வருகிறார். தன்னை அன்பாகவும், அரவணைப்பாகவும் நடத்தும் ஆசிரியர்கள் போலவே தானும் ஆசிரியராக வேண்டும் என்பதே ஆர்த்தியின் லட்சியம்.  

ஆர்த்தி, தங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் தோழி எனக்கூறும் அவரது சக மாணவிகள், உடல் நலிவுற்றப்போதிலும் அவரின் கையெழுத்து அவ்வளவு அழகு என்றும் அனைவரையும் ஈர்க்கும் என்றும் ஆகவே அவர் தொடர்ந்து எங்களுடன் படிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். படிப்பில் மட்டுமின்றி, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி என படைப்பாற்றலில் சிறப்பாக செயல்படும் என பெருமை பேசுகிறார்கள் ஆர்த்தியின் ஆசிரியர்கள். தன்னுடைய உடல் குறைபாட்டை எண்ணாமல் தன்னுடைய வேலையை தாமாக முன்வந்து செய்வது,  சக மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது,  பிறர் உதவியை விரும்பாமல் தன்னம்பிக்கையுடன் எதிர்க்கொள்வது போன்ற திறமையைக் கண்டு பலமுறை மெய் சிலிர்த்துள்ளதாகக் கூறுகின்றனர். 

இந்தக் குறைபாட்டை அறிந்ததும் தாங்கள் சுக்கு நூறாக ஆனோம். ஆனாலும் படிப்பின் மீது ஆர்த்தி கொண்ட ஆர்வம் தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்கிறார் ஆர்த்தியின் தாய் செல்வி. இதுபோன்ற குழந்தைகள் பிறந்தால் தங்களுடைய கடமையாக ஏற்று பெற்றோர்கள் அக்குழந்தைக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்கிறார்.  அவளுடைய விருப்பத்திற்கேற்ப, அவளால் முடியும் வரை பள்ளிக்கு அனுப்பி வைப்போம் என்று கூறும்  செல்வி, குடும்ப பொருளாதாரம் ஒத்துழைக்காததால் ஆர்த்தியின் மருத்துவ சிகிச்சை கொடுப்பது சிரமமாக இருப்பதாக வருந்துகிறார். மருத்துவ சிகிச்சைக்காக உதவிக் கேட்டு போராடும் ஆர்த்தியின் பெற்றோர்கள் நம்புவது நல்ல உள்ளங்களை.. உதவிக் கரம் நீட்டுவோமா நண்பர்களே?

உதவ விரும்புவோர் ஆர்த்தியின் தாய் செல்வி அழைத்து பேசலாம்: 8925611305

தகவல்கள் : ஐஸ்வர்யா- செய்தியாளர் ,கோவை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com