மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: சபாநாயகர் தனபால் அறிவிப்பு
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று தொடங்கிய ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் வித்யா சாகர் ராவ் உரையாற்றினார். ஆளுநர் உரையை அடுத்து, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூடும் என்றும் அதில், ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஜன.27, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறவுள்ளது. ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பிறகு பிப்.1ல் முதலமைச்சர் பதிலுரை இடம் பெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். நாள்தோறும் காலை 10 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.

