`எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க’..,சீமானுக்கே ஷாக் கொடுக்கும் நாம் தமிழர் கட்சி முன்னாள் தம்பிகள்!

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கே ஷாக் கொடுக்கும் வகையில் கட்சியின் முன்னாள் தம்பிகள் உருவாக்கியிருக்கும், `கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாசறைதான்’ இப்போ ஹாட் டாபிக்.
நாம் தமிழர் / சீமான்
நாம் தமிழர் / சீமான்Seeman fb page

அரசியல் கட்சிகளில் மகளிரணி, இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞரணி, மருத்துவரணி, மீனவரணி என பல்வேறு பிரிவுகள் இருப்பது வழக்கம். சூழலியல் குறித்த புரிதல்கள் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட, சுற்றுசூழலுக்கும் திமுக, அமமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகளில் அணிகள் இருக்கின்றன. கலை மற்றும் கலாசாரப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் பிரிவு, மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான பிரிவு,விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு என பாஜகவின் அணிப் பட்டியலும் மிக நீண்டது.

அரசியல் கட்சிகள்
அரசியல் கட்சிகள்

மற்ற கட்சிகளைப் போலவே நாம் தமிழர் கட்சியிலும் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றை, பாசறை என்கிற பெயரில் அழைக்கிறார்கள். உதாணமாக இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, மகளிர் பாசறை என இந்தப் பட்டியல் நீள்கிறது. கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்புப் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை, மழலையல் பாசறை, உழவர் பாசறை என நாம் தமிழர் கட்சியிலும் பல வித்தியாசமான பிரிவுகள் இருக்கின்றன. இரத்ததானம் கொடுப்பதற்காகவே குருதிக்கொடைப் பாசறை என்கிற பிரிவையும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் கட்சிக்கு உள்ளே கட்சித் தலைமையின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டவை, ஆனால், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கே ஷாக் கொடுக்கும் வகையில் கட்சியின் முன்னாள் தம்பிகள் உருவாக்கியிருக்கும், `கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாசறைதான்’ இப்போ ஹாட் டாபிக்.

2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியில் பல்வேறு காரணங்களுக்காக பலர் கட்சியை விட்டு வெளியேறுவதும் சீமான் கட்சியைவிட்டு பலரை நீக்குவதும் வாடிக்கை. அப்படி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உருவாக்கியிருக்கும் பாசறைதான் அது. கட்சியில் தற்போது அங்கம் வகிக்கும் தொண்டர்களைவிட இவர்களின் சின்சியாரிட்டிதான் நம்மை சிலிர்க்க வைக்கிறது. வழியில் நாம் தமிழர் கட்சிக் கொடிக் கம்பத்தில் கொடி பழையதாக இருந்தால் உனடியாக புதுக்கொடி வாங்கி வந்து ஏற்றுவது, இரத்த தான முகாம் நடத்துவது, தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வாக்குக் கேட்பது, கட்சியின் சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களுக்கு சொந்த செலவில் வண்டி பிடித்துப் போவது என கட்சியில் உறுப்பினராக இருக்கும் தம்பிகளுக்கே சவால் விடுகிறார்கள் இந்த நீக்கப்பட்ட தம்பிகள்.

கொடி
கொடி

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாசறை என்கிற பெயரில் சமூக வலைதளக் கணக்குகளும் இருக்கின்றன. அதில் இந்த பாசறையில் உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வகுத்திருக்கிறார்கள். அதில் பல லாஜிக் கோளாறுகள் இருந்தாலும் கட்சியின்மீது அவர்கள் வைத்திருக்கும் பாசம் நன் கண்களை ஈரமாக்குகிறது.

விதிமுறைகள் ;

*நமது பாசறையில் இயங்கும் நபர்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். (கட்சியில இருக்கும்போது அப்படி இருந்திருக்கலாமே பாஸ் என்பதே கட்சிக்காரர்களின் கமெண்டாக இருக்கிறது)

*நமது முதன்மை நோக்கம் கட்சியில் புதியவர்களை இணைக்க வேண்டும் நமது பாசறைக்கு உறுப்பினர் சேர்க்க கூடாது. (அதெப்படி கட்சியை விட்டு நீக்கினாதானே நீங்க சேர்க்க முடியும். உங்க லாஜிக்கே இடிக்குதே பாஸ்)

*நமது பாசறையில் வட்டம் சதுரம் செவ்வகம் மாவட்டம் மாநிலம் என எந்த பொறுப்பாளரும் கிடையாது. (நல்ல விஷயம்தான்)

*கட்சியில் உறுப்பினராக இருக்கும் எவரையும் விமர்சனம் செய்ய கூடாது. யாரேனும் தவறுகள் செய்யும் பட்சத்தில் அவர்கள் தவறை சுட்டிகாட்டலாம். (நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கலாம், உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது.., அந்த மாதிரியா பாஸ்)

*பாசறையில் பயணிக்கும் யாவரும் கட்சியின் பெயரை பயன்படுத்தி யாரிடமிருந்தும் அன்பளிப்போ, பணமோ வாங்க கூடாது. இதனை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். (கட்சியிலதான் பொறுப்பாளர்களே கிடையாது. அப்புறம் யாரு தண்டிப்பா டவுட்டு)

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பேனர்
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பேனர்

*கட்சி நடத்தும் கூட்டங்களில் பாசறை சார்பாக கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்திற்கு பாசறை சார்பில் பாதாகை அல்லது சுவரொட்டிகள் வைக்க வேண்டும். பதாகைகளில் நமது பாசறை பெயரை போட கூடாது. நமது கட்சி பெயரை மட்டுமே போட வேண்டும். (பாசறை பேருல பேனர் கண்ணுல படுதே பாஸ்)

*பதாகை சுவரோட்டிகள் வடிவமைக்கும் போது யாருடைய படத்தையும் பெயரையும் விளம்பர படுத்தாமல். கூட்டம் நடத்தும் நோக்கத்தை மட்டுமே பதிய வேண்டும். கட்டாயம் அண்ணன் சீமான் மற்றும் தேசியத் தலைவர் படங்கள் இருக்க வேண்டும். (அண்ணன் மேல என்ன ஒரு பாசம்)

*கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு முழுவதும் இதுவரை கட்சியை நேசிக்கிற நபர்கள் நமது பாசறையில் பயணிக்க முழு தகுதியும் உண்டு. நமது கட்சிலிருந்து நீக்கப்பட்ட பிறகு திராவிட மற்றும் மதவாத கட்சிகளுக்கு சென்றவர்களுக்கு நமது பாசறையில் துளியும் இடம் கிடையாது. (ச்சே என்ன ஒரு கொள்கை)

*பாசறை உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதும் போது நாகரிகமான கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் யாரையும் ஒருமையில் எழுதிவிட கூடாது. (ஃபாலோ பண்ணா நல்லாதான் இருக்கும்)

தொடரும்........ என முடித்திருக்கிறார்கள்.

கடைசியில் தொடரும் என குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் இந்தப் பட்டியல் இன்னும் அப்டேட் ஆகும் என்றே தெரிகிறது. அதுமட்டுமல்ல, `எங்களை துண்டு துண்டாக வெட்டி வீசினாலும் எங்களையும் எங்கள் கட்சியையும் விட்டு எங்களை எவனாலும் பிரிக்க முடியாது’ என்கிற எச்சரிக்கைப் பதிவுகளையும் அந்த முகநூல் பக்கத்தில் பார்க்கமுடிகிறது.

வழக்கறிஞர் ஸ்ரீதர்
வழக்கறிஞர் ஸ்ரீதர்

இந்தப் பாசறை குறித்து நாம் தமிழர் கட்சியியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் பேசினோம்..,

``கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்கூட கட்சி மீதான அபிமானத்தின் காரணமாக, கொள்கை மீதுள்ள பிடிப்பின் காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள். எங்கள் கூட்டங்களுக்கு பொதுமக்களுக்கு வருவதற்கு உரிமை இருப்பதுபோல, கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது என்றே பார்க்கிறோம். அவர்களின் விதிமுறைகள் குறித்தெல்லாம் எனக்குத் தெரியாது.அதை நாம் விமர்சனம் பண்ண முடியாது’’ என்கிறார் அவர்.

சீமானும் ஒரு பொதுக்கூட்டத்தில், இந்தப் பாசறை குறித்துப் பேசியிருக்கிறார். அவுட்சோர்ஸிங் மாதிரி `நல்லாதான் இருக்கு’ என கமெண்ட் அடித்திருப்பார். நாமும் அதையேதான் சொல்ல விரும்புகிறோம்...நல்லாதான் இருக்கு.., இன்னும் எதிர்பார்க்கிறோம் தம்பிகளே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com