திருவண்ணாமலையில் ஆடையின்றி பூஜை நடத்திய சாமியார்
திருவண்ணாமலையில், ஆந்திராவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் ஆடையின்றி பூஜை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணர் ஆசிரமம் எதிரில் உள்ள ஒரு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆசிரமம் உள்ளது. அங்கு யொகிஸ்ர ஸ்ரீ சரஸ்வதி சுவாமிகள் என்ற சாமியார் ஆந்திராவில் இருந்து வந்து தங்கியுள்ளார். அத்துடன் அவர் நிர்வாணமாக இருந்து ஒரு பெரிய யாகத்தையும், நிர்வாண பூஜையையும் செய்து வருகிறார். உலக நன்மைக்காகவும், இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களின் நன்மைக்காக மட்டுமே செய்யப்படுகிறது என்று சாமியார்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த யாகமானது 25 ஆயிரம் கிலோ பசுநெய் கொண்டும், சந்தனக்கட்டைகள், வாசனை திரவியங்களை போட்டும் காலை மற்றும் மாலை என இரு வேளை பூஜையுடன் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தச் சாமியார் இதுபோல 224 யாகங்களைச் செய்துள்ளாராம். யாகம் நடக்கும் இடத்தில் ஆந்திராவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் கலந்து கொண்டுள்ளனர். நிர்வாண சாமியாரை ஆந்திரா பெண்கள் ஆரத்தி எடுத்து பூஜையும் செய்கின்றனர். அந்தச் சாமியார் பெண்களின் தாலியை தொட்டு ஆசிர்வாதம் செய்கிறார்.
இவ்வாறு யாகம் செய்வது திருவண்ணாமலையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிர்வாண பூஜை கேள்விப்பட்ட திருவண்ணாமலை காவல்துறையினர் அந்த ஆசிரமத்திற்கு சென்று அந்த பூஜையை செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் அந்தச் சாமியாரிடம் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை, விசாரணை மட்டும் நடத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.