“உன் பிறப்பை சந்தேகிக்கிறேன்..” - ஆ.ராசா சர்ச்சை பேச்சு!
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா, முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து, அவரை “மகா நடிகன் அல்ல, மகா அயோக்கியன்” என குற்றம்சாட்டினார். மேலும் அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்துகளை எதிர்த்து, “நீ யாருக்காகப் பிறந்தாய் என்பதில் எனக்கே சந்தேகம்” என தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தினார். மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்த துன்பங்களை எடுத்துக்கூறி, திமுக நாகரிகத்தின் உச்சம் என வலியுறுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் மிசாவில் கைதானது குறித்து முதல்வர் விஜய் பேசியதற்கும், அவருடைய சைகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முதலமைச்சர் விஜயை ஒருமையில் பேசியதோடு, அமைச்சர் நிர்மல் குமார் குறித்து தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்தார்.
ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, “தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு என ஒரு வரலாறு இருக்கிறது. முதலமைச்சராக கலைஞர் இருந்தாலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தாலும் ஆக்கப்பூர்வமான, முதிர்ச்சியான கேள்விகளுக்கு முறையாக பதில் அளிப்பார்கள். சிற்றரசு பேசும்போது மகா நடிகன் என்று சொன்னார். ஆனால் அவர் மகா நடிகர் இல்லை. தொட்டபெட்டா மலை மேல முட்டை பரோட்டா என பாடியவர் மகா நடிகனா?. சினிமாவின் மூலம் ஒரு நடிகனாக மக்களுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்? மக்களுக்கு நீ என்ன சொல்கிறாய் என்பதுதான் விஷயம். நீங்கள் மகா நடிகன் அல்ல. மகா அயோக்கியன். கொலஸ்ட்ரால் ரத்தத்தில் இருக்கலாம், மூளையில் இருக்கக்கூடாது என முதலமைச்சர் விஜயை விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமாரை குறிப்பிட்டு பேசிய அவர், இப்போது ஒருவர் இதற்காகச் சிறைக்குப் போகவில்லை. அதற்காகப் போகவில்லை எனப் பேசுகிறார். எனக்குக்கூட நீ யாருக்காகப் பிறந்தாய் என்பதில் சந்தேகம் இருக்கிறது. நான் கேட்கலாமா? நீ என் தலைவனின் தியாகத்தைச் சந்தேகிக்கும் போது, நான் உன் பிறப்பைச் சந்தேகிக்கிறேன். வழக்குப் போட்டுக்கொள் எனத் தரக்குறைவாக விமர்சித்து பேசினார்.
மேலும் மிசா காலத்தில் ஸ்டாலின் கைதானது குறித்து பேசிய அவர், “23 வயதான ஒரு இளைஞனை (மு.க.ஸ்டாலின்) கைது செய்து அடித்து தாடையை உடைத்தார்கள். அவரை காப்பாற்ற சென்றவர் கொலை செய்யப்படுகிறார். அந்த இளைஞனை தந்தை(கலைஞர்) சந்திக்க போகிறார். வழக்கத்துக்கு மாறாக முழுக்கை சட்டை போட்டிருக்கிறார். முகம் வாடிப் போயிருக்கிறது. அப்போது முக ஸ்டாலின் பேசுகிறார், அப்பா எனக்கு ஏற்பட்ட காயங்களை விசாரிக்க நீங்கள் வர வேண்டாம். நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் அடி விழுந்திருக்கிறது. அதை தடுத்து நிறுத்தி நாட்டை காப்பாற்றுங்கள் என சொன்னவர் மு.க. ஸ்டாலின். மிசாவில் கைது செய்யப்பட்டு இப்போது வரை உயிரோடு இருப்பவர்கள் அனைவரும், ஸ்டாலின் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டது உண்மை என்கின்றனர். எங்கள் கட்சி சார்பில்லாமல் நடுநிலையாளராக இருக்கக்கூடிய தோழர் தியாகு ஸ்டாலின் அடி வாங்கியது எல்லாம் உண்மை என்கிறார். கொஞ்சமாவது நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள், நாகரிகத்தின் உச்சம்தான் திமுக” என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

